×

அம்மையநாயக்கனூர் கருக்காச்சி ஓடையில் அனுமதியின்றி கட்டப்படும் தனியார் பாலம்: அகற்ற விவசாய சங்கங்கள் கோரிக்கை

நிலக்கோட்டை: கொடைரோடு அருகே சிறுமலையாறு நீர்த்தேக்கத்திலிருந்து தெப்பங்குளம் கண்மாய் செல்லும் கருக்காச்சி ஓடையில், அனுமதியின்றி கட்டிவரும் தனியார் பாலத்தை மாவட்ட நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும் என்று விவசாய சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ள. கொடைரோடு அருகே உள்ள சிறுமலையாறு நீர்தேக்கத்திலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலுள்ள தெப்பங்குளம் கண்மாய்க்கு செல்லும் மிகவும் பழமையான சுமார் 15 மீட்டர் அகலமுள்ள கருக்காச்சி ஓடை அமைந்துள்ளது. இந்த ஓடையின் குறுக்கே அம்மையநாயக்கனூரில் நகர் வழியாக செல்லும் போக்குவரத்து அதிகமுள்ள அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு சமுதாய நல மருத்துவமனைக்கு எதிரே விபத்தை ஏற்படுத்தும் வகையில் பொதுப்பணி துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் என அரசுத்துறை அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் தனியார் பிளாட்களுக்கு செல்வதற்காக ஓடையை மறித்து போர்க்கால வேகத்தில் தனியார் ஒருவர் பாலம் கட்டி வருகிறார். இந்த பாலத்தால் ஓடையின் மறுபுறமுள்ள பாரம்பரியமிக்க 800 ஆண்டு பழமையான பெருமாள் கோயில் தெப்பக்குளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து முருகத்தூரான்பட்டி தெப்பங்குளம் கண்மாய் பாசன விவசாயிகள் சங்கத்தலைவரும், கூட்டுறவு சங்கத் தலைவருமான ஜான்இன்னாசி கூறுகையில், இந்தாண்டு இப்பகுதியில் வரலாறு காணாத நல்ல மழை பெய்தது. இதனால் சிறுமலை அடிவாரத்தில் உள்ள சிறுமலையாறு நீர்த்தேக்கம் மூன்றுமுறை நிறைந்தது. இருப்பினும் எங்கள் கண்மாயின் நீர்வரத்து ஓடையான கருக்காச்சியில் தண்ணீர் இல்லாமல் போனது. இதற்கு ஓடையில் பல தனியார் ஆக்கிரமிப்புகள் மற்றும் தடுப்பணைகள் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது. இதனால் கருக்காச்சி ஓடையில் ஒரு சொட்டு தண்ணீர்கூட வராமல் வரண்டு கிடக்கிறது. இதனால் இப்பகுதி நிலத்தடி நீர்மட்டம் அதள பாதாளத்திற்கு சென்றுள்ளதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என்ற சூழ்நிலை உள்ளது.

இதற்காக விவசாய சங்கங்கள் சார்பில் பல்வேறு போராட்டங்களை முன்னெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலையில் அம்மையநாயக்கனூர் அருகே கருக்காச்சி ஓடையை மறைத்து தனியார் ஒருவரின் பிளாட்டுக்கு செல்ல அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் பாலத்தால் மழைக்காலத்தில் கருக்காச்சி ஓடையில் அடைப்புகள் ஏற்படும். இதனால் நீரின் வேகம் குறைந்து விரயமாவதுடன், தெப்பங்குளம் கண்மாயிக்கு வரும் நீர் முற்றிலும் தடுக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

இதனால் எங்கள் பகுதி மேலும் கடுமையான வறட்சியை சந்திக்க நேரிடும். எனவே இந்த ஓடையின் குறுக்கே அரசுத்துறைகளின் உரிய அனுமதியின்றி தனிநபரால் கட்டப்பட்டு வரும் பாலத்தை உடனடியாக அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர், வருவாய்த் துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர், பொதுப்பணித்துறையினருக்கு புகார் மனு கொடுத்துள்ளோம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோருகிறோம் என்றார்.

Tags : Ammayanayakanur ,Karukachi , Ammayanayakanur private bridge constructed without permission on Karukachi stream: Farmers' associations demand removal
× RELATED அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கவுன்சிலர்கள் மாதாந்திர கூட்டம்