×

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம்: சோனியா காந்தி, ராகுல் பங்கேற்பு

டெல்லி: அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் கார்கே, முன்னாள் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இதேபோல் திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, ஆதிர் ரஞ்சன் சவுத்ரி மற்றும் எம்.பி.க்கள் பலர் பங்கேற்றுள்ளனர். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.

கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே அதானி விவகாரத்தில் கூட்டுக்குழு விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதேபோல் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியை சேர்ந்த எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். இதே நிலையே தொடர்ந்து நடைபெற்று வந்தது. இன்று காலை 11 மணிக்கு இரு அவைகளும் கூடியதும் அதானி விவகாரம் குறித்து எதிர்க்கட்சியும், ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆளுங்கட்சியும் முழக்கம் எழுப்பியது. இதனால் அலுவல் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை திங்கட்கிழமை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 5 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கிய நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் கோஷமிட்டு வருகின்றனர். வேலையில்லா திண்டாட்டம், பணவீக்கம் பிரச்சனைகளை திசை திருப்பவே ராகுல் மீது புகார் தெரிவிப்பதாக காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்காத தேச விரோதி பாஜகதான் என விமர்சனம் செய்த கார்கே, தன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க ராகுல் காந்தி பேச ஏன் அவகாசம் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். நாடாளுமன்ற கூட்டுக்குழு தேவை என்ற கோரிக்கையை ஒன்றிய அரசு தொடர்ந்து ஏற்க மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : Adani ,Sonia Gandhi ,Rahul , Adani issue, joint committee investigation, opposition protest
× RELATED மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் சோனியா காந்தி..!!