×

பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் 9 பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகிறது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் தகவல்

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் (16.3.2023) அன்று ரூ.53.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய பூங்காவினை குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில்  மகேஷ்  பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.
                            
குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பின்னர் தெரிவிக்கையில் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது, அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம்  போன்ற வசதிகளை உருவாக்கி தரவேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவிட்டதின் அடிப்படையில் வாரியத்தின் சார்பில் அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
                  
அந்த வகையில்  எழில் நகர் பெரும்பாக்கம் திட்டப்பகுதியில் 4032 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் திட்டப்பகுதி - I  2112 குடியிருப்புகளும், பெரும்பாக்கம் திட்டப்பகுதி I மற்றும் II 13152 குடியிருப்புகளும் மற்றும் முன்மாதிரி திட்டப்பகுதியில் 1152 குடியிருப்புகளும் ஆக மொத்தம் 20448 குடியிருப்புகளில்  மக்கள் வசித்து வருகின்றனர். இக்குடியிருப்புதாரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.   

இக்குடியிருப்புதாரர்களின் பொழுது போக்கிற்காகவும், ஆரோக்கியத்தை மேம்படுத்தவும்,  சிறுவர்கள் விளையாடி மகிழவும் , 9 பூங்காக்கள் அமைப்பதற்காக ரூ.4.30 கோடி மதிப்பீட்டில் திட்டமதிப்பீடு  செய்யப்பட்டு  ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.  

தற்பொழுது ரூ.53.46 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட ஒரு பூங்காவின் பணிகள் முடிவடைந்துள்ளதால் குடியிருப்புதாரர்களின்  பயன்பாட்டிற்கு இன்றைய தினம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பூங்காக்களின் பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு  திறக்கப்படும்  என தெரிவித்தார்.
                           
பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சரின்  அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் இந்த இடம் சீர்செய்யப்பட்டு  பூமிகா டிரஸ்டு நிர்வாகிகள் அருணா சுப்பிரமணியம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் சார்பில் ரூபாய் 3 கோடி செலவில் 333 மாணவர்கள் மற்றும் 9 ஆசிரியர்கள் கொண்ட பள்ளிக்கு 16 வகுப்பறை, 1 நூலகம், கணினி அறை, கூட்ட அரங்கம், பெண்கள் மற்றும் ஆண்கள் கழிப்பறை, தலைமை ஆசிரியர்அறை, ஆசிரியர் அறை, மேஜை  நாற்காலி போன்ற அடிப்படை வசதிகள்  ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.  

தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்திய நம்ம ஸ்கூல் திட்டம் (  CSR ACTIVITY  ) மூலமாக  உதவி கரம் நீட்டுங்கள்  என்று கூறியதற்கு இணங்கி இன்று பூமிகா  டிரஸ்டு மிகவும் அழகாக பணியினை செய்ததற்கு எனது பள்ளி கல்வித் துறை சார்பாக  நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

இவ்விழாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ், வாரிய தலைமை பொறியாளர் எஸ்சுந்தரராஜன், மேற்பார்வை பொறியாளர் மாலா, நிர்வாகப் பொறியாளர் கே.சிவசங்கரன்  உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

Tags : Minister ,T.R. Moe Andarasan , 9 parks are being constructed in Perumbakkam project area at an estimated cost of Rs 4.30 crore: Minister Thamo Anparasan informs
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி