டெல்லி: முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து வெளிநாட்டு நிபுணர்கள் கொண்ட குழு அமைத்து ஆய்வு நடத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மனு தாக்கல் செய்துள்ளது. முல்லைப்பெரியாறு அணை கேரள அரசு அணை தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு இடையே தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில்லாத பகுதியில் இருப்பதாக கேரள அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதே நேரத்தில் 152 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்கும் அளவிற்கு அணை பலமாக இருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியாக குறைக்க கோரி ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கில் கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
புதிய மனுவில், முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை ஆய்வு செய்ய வேண்டும். இரு மாநில பிரதிநிதிகள் முன்னிலையில் அணை தொடர்பான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அணையின் கட்டுமானம், நிலத்தின் அமைப்பு, நிலநடுக்கம் சார்ந்து இந்த ஆய்வு இருக்கவேண்டும் எனவும் அணை பாதுகாப்பு சட்டம் 2021-ன் கீழ் நெறிகாட்டு முறைகள் படி பெரியாறு அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கேரள அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அணை உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து 11 ஆண்டுகள் ஆகிவிட்டதால் மீண்டும் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.