×

நாடாளுமன்ற துளிகள்...

* பாலஸ்தீனத்துக்கு உதவி
மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த ஒன்றிய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளீதரன் கூறியதாவது:  பாலஸ்தீனத்திற்கு கடந்த பல ஆண்டுகளாக அரசியல், தூதரகம் அளவிலும் அதன் வளர்ச்சிக்கும் இந்தியா பல்வேறு வழிகளில் தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது.  இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பதற்றம் அதிகரிக்கும் போதெல்லாம், இரு நாடுகளும் அமைதி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க இந்தியா வலியுறுத்தி உள்ளது. ஐநா சபை மற்றும் அதன் பல்வேறு அமைப்புகளின் கூட்டங்களில் கூட இந்தியா பாலஸ்தீனத்தை ஆதரித்துள்ளது. திறன் மேம்பாடு, திட்ட உதவி மற்றும் பட்ஜெட்டிற்கு ஆதரவு மூலம் பாலஸ்தீனத்தை கட்டியெழுப்ப இந்தியா நிதி மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவு அளிக்கிறது.

* தெற்காசிய நாடுகளின் வளர்ச்சிக்கு சீனா உதவுவது தெரியும்
மாநிலங்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த ஒன்றிய வௌியுறவுத்துறை இணையமைச்சர் பி.முரளிதரன், “தெற்காசியா நாடுகளின் துறைமுகங்கள், விமான நிலையங்கள், நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு சீனா நிதியுதவி அளித்து வருவது அரசுக்கு தெரியும்” என்றார். மற்றொரு கேள்விக்கு பதில் கூறிய அவர், “கல்வி, கலாச்சாரம், முதலீடு, வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் இந்தியா தனது அண்டை நாடுகளுடன் விரிவான உறவுகளை கொண்டுள்ளது” என்று தெரிவித்தார்.

* 216 உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்துக்கு பரிந்துரை வரவில்லை

மாநிலங்களவையில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்த பதில்: மார்ச் 10ம் தேதி வரை உச்சநீதிமன்றத்தில் எந்த காலி பணியிடமும் இல்லை. 25 உயர்நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1114 நீதிபதிகளில் 780  நீதிபதிகள் பணியில் உள்ளனர். 334 நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது. இதில் 118 பணியிடங்களை நிரப்புவதற்காக உயர்நீதிமன்ற கொலீஜியத்தின் பரிந்துரைகள் பெறப்பட்டு அதற்கான செயல்முறைகள் பல்வேறு நிலைகளில் உள்ளது. 216 காலி நீதிபதி பணியிடங்களுக்கான பரிந்துரைகள் உயர்நீதிமன்ற கொலீஜியத்திடம் இருந்து இன்னும் பெறப்படவில்லை.

* மேலும் 100 நிலஅதிர்வு கண்காணிப்பு மையம்
மாநிலங்களவையில் புவி அறிவியல் துறை ஜிதேந்திர சிங்  எழுத்து மூலமாக அளித்த பதில்: நில அதிர்வு தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் 152 கண்காணிப்பு மையங்களை நிலஅதிர்வுக்கான தேசிய மையம் பராமரித்து வருகின்றது. அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் மேலும் 100 நிலஅதிர்வு கண்காணிப்பு மையங்கள் அமைப்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது.

Tags : Parliament , Parliament drops...
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...