×

மும்பையில் முதல் ஒருநாள் போட்டி: இந்தியா - ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, முதலில் விளையாடிய டெஸ்ட் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி மும்பையில் இன்று நடைபெறுகிறது. ஐசிசி உலக கோப்பை ஒருநாள் போட்டிக்கு ஒத்திகையாக அமைந்துள்ள இந்த தொடர், கிரிக்கெட் ரசிகர்களின் ஆவலை வெகுவாகத் தூண்டியுள்ளது. உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர்-நவம்பரில் இந்தியாவில் நடைபெற உள்ளதால்... வீரர்கள் தேர்வு, ஆடுகளங்களின் தன்மை, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வியூகங்கள் போன்ற அம்சங்களில் வீரர்களும், பயிற்சியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த உள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பரில் இங்கிலாந்து அணியுடன் மோதிய ஒருநாள் தொடரில் 3-0 என வென்ற ஆஸ்திரேலியா, அதன் பிறகு விளையாடும் முதல் ஒருநாள் தொடர் இது. காயத்தால் அவதிப்பட்ட வார்னர், மேக்ஸ்வெல் இருவரும் அணிக்கு திரும்பியுள்ளது ஆஸி. தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. ஒருநாள் போட்டிகளில், இந்திய மண்ணில் விளையாடிய 8 இன்னிங்சில் வார்னர் 391 ரன் (சராசரி 55.85) குவித்துள்ளார். டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஸ்பின்னர்கள் நாதன் லயன், மர்பி, குனேமன் ஆகியோர் நாடு திரும்பிய நிலையில் ஆடம் ஸம்பா, ஆஷ்டன் ஏகார் சுழற்பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு எந்த அளவுக்கு நெருக்கடி கொடுக்க முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். கம்மின்ஸ், ஹேசல்வுட், ஜை ரிச்சர்ட்சன் இல்லாததும் ஆஸி. அணிக்கு சற்று பின்னடைவு தான்.

கேப்டன் ரோகித் ஷர்மா சொந்த காரணங்களுக்காக முதல் போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அவருக்கு பதிலாக ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தலைமையில் இந்திய அணி களமிறங்குகிறது. காயம் காரணமாக விலகிய ஷ்ரேயாஸ் அய்யருக்கு பதிலாக ரஜத் பத்திதார் அல்லது சூரியகுமார் யாதவ் களமிறங்கலாம். விக்கெட் கீப்பராகக் களமிறங்குவதில் கே.எல்.ராகுல். இஷான் இடையே போட்டி நிலவுகிறது. டெஸ்ட் போட்டியில் ரன் குவிக்க முடியாமல் திணறியதால் தனது இடத்தை தக்கவைக்க முடியாத ராகுல், ஒருநாள் போட்டிகளில் சிறப்பாகவே செயல்பட்டுள்ளதால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். 5வது வீரராகக் களமிறங்கி விளையாடிய 16 இன்னிங்சில் அவர் 658 ரன் (சராசரி 50.61, சதம் 1, அரை சதம் 6) குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷமி, சிராஜ், உமேஷ், மாலிக், உனத்கட் என வேகப் பந்துவீச்சும்; ஜடேஜா, அக்சர், வாஷிங்டன், குல்தீப், சாஹல் என சுழல் கூட்டணியும் வலுவாக உள்ளது இந்தியாவுக்கு சாதகமாக இருக்கும். நட்சத்திர வீரர் கோஹ்லி மீண்டும் சிறப்பாக ரன் குவிக்கத் தொடங்கியிருப்பதும் ஆஸி. அணிக்கு சற்று கவலை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இரு அணிகளுமே தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்புடன் உள்ளதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

இந்தியா: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மன் கில், கோஹ்லி, சூரியகுமார் யாதவ், கே.எல்.ராகுல், இஷான் கிஷன் (கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர், யஜ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், ஷர்துல் தாகூர், அக்சர் படேல், ஜெய்தேவ் உனத்கட்.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லாபுஷேன், மிட்செ மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன், ஜோஷ் இங்லிஸ், ஷான் அபாட், ஆஷ்டன் ஏகார், மிட்செல் ஸ்டார்க், நாதன் எல்லிஸ், ஆடம் ஸம்பா.

Tags : Mumbai ,India ,Australia , 1st ODI in Mumbai: India vs Australia Multi-Test today
× RELATED பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய்...