பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திருநீர்மலையில் புகழ்பெற்ற ரங்கநாத பெருமாள் கோயில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் ஸ்தல அதிபதியான நீர்வண்ண பெருமாளுக்கு பங்குனி திருவிழா பிரம்மோற்சவம் கடந்த வியாழன் துவங்கி, 11 நாட்களாக விமர்சையாக நடைபெற்றது. கடந்த செவ்வாய்கிழமை பெருமாளுக்கு கருடசேவை நிகழ்ச்சியும், நேற்று காலை தேரோட்டமும் நடைபெற்றது. முன்னதாக, தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும் தாயாருக்கு பல வண்ண மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
அதை தொடர்ந்து நடைபெற்ற தேரோட்டத்தில், பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமிகாந்தன் பாரதிதாசன், செயல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்து விழாவினை துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சென்னை மட்டுமின்றி செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ‘கோவிந்தா கோவிந்தா’ என்ற கோஷமிட்டு, தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர். சங்கர் நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
