செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் வாராந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ், வேளாண்மை இணை இயக்குநர் அசோக், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும் பொதுப்பணித்துறை, மின்சார துறை, வனத்துறை உள்ளிட்ட அரசு நெல் கொள்முதல் சார்ந்த அதிகாரிகளும் திரளாக கலந்து கொண்டனர். அப்போது, பழையனூர் மணி என்ற விவசாயி, ‘‘தனது நிலத்தில் விளைந்த 250 நெல் மூட்டைகளை விற்பனைக்காக படாளத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் வைத்துள்ளேன். கிட்டத்தட்ட 40 நாட்களுக்கு மேல் ஆகியும் இன்றுவரை எனது நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யாமல் மற்றவர்களுடைய நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வருகின்றனர்.
இலவசமாக கொள்முதல் செய்ய வேண்டிய பணியை பணத்தை பெற்றுக்கொண்டு அரசு அதிகாரிகள் மற்றும் அரசு தரப்பு ஊழியர்கள் செய்கின்றனர். அரசு அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்களை விட அரசியல் புள்ளிகளின் கீழ்தான் இந்த கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. கூடுதலாக பணம் கொடுத்தால்தான் எனது நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும் என, அதிகாரிகள் கட்சி சார்ந்த பிரமுகர்கள் கூறுகின்றனர்.’’ என புகார் அளித்தார். இதனால், படாளம் நேரடி நெல் கொள்முதல் அதிகாரிக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் விவசாயிகளிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். இதையடுத்து, சம்மந்தபட்ட நெல்கொள்முதல் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
