வைரஸ் காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் பயப்பட வேண்டாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுரை

சென்னை: தமிழகத்தில் காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது; பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் என, அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில், இன்னுயிர் காப்போம் திட்டம் - நம்மை காக்கும் - 48 திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெற்று பயனடைந்து வரும் ஹரிகிருஷ்ணன் என்ற 1 லட்சத்து 50 ஆயிரமாவது பயனாளியுடன் கலந்துரையாடல் நிகழ்வு பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று  நடந்தது. இதில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு அந்த பயனாளியுடன் கலந்துரையாடி நலம் விசாரித்தார்.

பின்னர், அவர் கூறியதாவது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021 டிசம்பர் மாதம் இந்தியாவிலேயே முன் மாதிரியான இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, அடிக்கடி விபத்து ஏற்படும் 500 இடங்கள் கண்டறியப்பட்டது. அந்த இடங்களை சுற்றி 1083 மருத்துவமனைகள் தேர்வு செய்யப்பட்டு இந்த மருத்துவமனைகளில் இத்திட்டம் பயன்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 17 ஆயிரம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைகின்றனர். தமிழகத்தில் இதுவரை சாலை விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,107 என்கிற அளவில் பதிவாகியுள்ளது. 15 மாதங்களில் இந்த திட்டத்திற்கு ரூ.132 கோடியே 52 லட்சம் செலவு செய்துள்ளோம்.  108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக சென்று கொண்டு இருக்கிறது. 1351 ஆம்புலன்ஸ் வாகனங்கள் செயல்படுகிறது. சாலை விபத்துகளில் இந்த ஆண்டு 1.3 சதவீதம் இறப்பு குறைந்துள்ளது.

ஒன்றிய அரசின் அதிகாரிகள் நமது திட்டத்தை கேட்டு வருகின்றனர். இந்தியா முழுவதும் காய்ச்சல் பரவி உள்ளது. தமிழகத்தில் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. காய்ச்சலின் வீரியம் குறைவாக உள்ளது. பொதுமக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம். மற்ற மாநிலங்கள் பேசிக் கொண்டிருந்தபோது, நாம் செயல்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டோம். இந்த காய்ச்சலுக்கு கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பது அவசியம் என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 6613 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளது. இதில் 7 லட்சம் பேர் பயன் அடைந்துள்ளனர் என்றார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் செந்தில்குமார், மற்றும் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: