சென்னை: சென்னை உயர் நீதிமன்ற பத்திரிகையாளர்கள் சங்கத்தை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மூத்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், உயர் நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஏ.டி.ஜெகதீஸ் சந்திரா உள்ளிட்ட நீதிபதிகளும் பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் ஆகியோரும் வாழ்த்தி பேசினர். விழாவில் சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா பேசியதாவது: சட்டம் இயற்றும் சட்டமன்றத்தின் அதிகாரத்தில் அதிகாரிகள் தலையிடும் போது நீதித்துறை தலையிடும். சட்டமன்றம், அதிகாரி, நீதித்துறை ஆகிய அமைப்புகள் நான்காவது தூணான பத்திரிகை மற்றும் ஊடகத்தை விரும்பின. வரம்பை தாண்டாமல் பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் விளைவுகள் பின்தொடரும்.
போஸ்ட் கார்டை கூட நீதிமன்றம் வழக்காக எடுத்துக் கொள்ள முடியும். அதுதான் பொதுநல வழக்கு. நீதிமன்றத்தை அணுக முடியாதவர்களுக்கு பொதுநல வழக்கு பலன் தரும். அதற்கு பத்திரிகையாளர்கள் தான் காரணம். நான்காவது தூண் பத்திரிகை என கருதும்போது அவர்களின் பொறுப்பு முக்கியமானது. அனைவருக்கும் கருத்து, பேச்சு சுதந்திரம் உள்ளது. பத்திரிகைக்கு என்று தனி உரிமை இல்லை. கருத்து, பேச்சு சுதந்திரம் தான் பத்திரிகைகளுக்கான சுதந்திரம். பொள்ளாச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கும் முன், குறிப்பிட்டவரின் மகன், சகோதரர் சம்பந்தப்பட்டுள்ளதாக அனைவரும் சொல்ல துவங்கி விட்டனர். ஊடக விசாரணை என்ற பெயரில் இவர்கள் அப்பாவி என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு இழைத்த அநீதியை சரிபடுத்த முடியாது.
செய்தி தெரிவிப்பது நாட்டுக்கு முக்கியம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஜனநாயகத்தை வளர்க்க பத்திரிகைகள் முக்கியம் என்றார். நீதிபதி வைத்தியநாதன் பேசும்போது, ‘‘பத்திரிகை சுதந்திரம் காக்கப்படவேண்டும். ஜனநாயகத்தில் பத்திரிகைகளின் பங்கு அளப்பரியது. ஆனால், பத்திரிகைகள் வரம்பை தாண்ட கூடாது. வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது அந்த வழக்கு குறித்து பத்திரிகை விவாதங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்’’ என்றார். நீதிபதி மகாதேவன் பேசும்போது, ‘‘ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்கும் பத்திரிகைகளுக்கு என்று சில பொறுப்புகள் உள்ளன. பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் அதை தவறாக பயன்படுத்திவிட கூடாது’’ என்றார்.
* முதல்வர் வாழ்த்து செய்தி
பத்திரிகையாளர்கள் சங்கம் தொடக்கத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில், பத்திரிகை சுதந்திரத்திற்கு என்று தனியொரு பிரிவு இல்லையென்றாலும் அரசியல் அமைப்பு பிரிவு 19(1)ல் வழங்கப்பட்டுள்ள 6 அடிப்படை உரிமைகளில் ஒன்றான பேச்சு சுதந்திரத்தின் ஓர் அங்கமாக ஊடக சுதந்திரம் நீதித்துறையால் கருதப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. அந்த அடிப்படையில்தான் ஊடகங்கள் ஜனநாயகத்தின் 4வது தூணாக திகழ்கின்றன. நீதி பரிபாலனையில் குறுக்கிடாத வகையிலும், நியாயமான விமர்சன எல்லையை தாண்டிடாத வகையிலும் நீதித்துறையின் புகழுக்கு பாதகம் ஏற்படாத வகையிலும் ஊடகவியலாளர்கள் தங்கள் சுதந்திரத்தை பயன்படுத்த வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.