தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: திமுக அரசின் மூத்த அமைச்சருக்கும், ஆளும் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஒருவருக்கும் இடையே, கடந்த 15ம் தேதி, யார் பெரியவர் என்ற ஈகோ யுத்தத்தில், திருச்சி கன்டோன்ட்மென்ட் காவல் நிலையத்திற்குள்  திமுக நிர்வாகிகள் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த கலவரத்தில் ஈடுபட்ட அமைச்சரின் அடியாட்கள், பெண் காவலரையும் தாக்கி உள்ளனர்.

உட்கட்சி மோதலில் காவல் நிலையத்தின் மீதே தாக்குதல் நடத்தியவர்களை காவல் துறை உடனடியாக கைது செய்யாமல் அவர்களை சுதந்திரமாக விட்டுவிட்டு, ஆற அமர இரு பிரிவினரிடமும் புகார் மனுக்களை பெற்று, மேலிடத்தின் அனுமதியை பெற்று மெதுவாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்துள்ளனர். மற்றொரு நிகழ்வாக, ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரக்கோணம் அருகில் உள்ள தக்கோலம் என்ற ஊரில், கஞ்சா போதையில் மாமூல் கேட்டு வரும் ரவுடிகளால் அச்சமடைந்துள்ள ஒரு கடைக்காரர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், தனது கடையின் கதவுகளில் கஞ்சா போதையில் உலாவரும் ரவுடிகளால், இந்த கடை காலவரையறையின்றி மூடப்படுகிறது என்று எழுதப்பட்ட ஒரு காகித்தை ஒட்டி கடையை மூடி வைத்துள்ளார்.இதுபோன்ற சம்பவங்களை உடனடியாக கட்டுப்படுத்தி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும்.

Related Stories: