திருச்சி சமயபுரம் கோயில் வைப்புத்தொகை திமுக ஆட்சியில் ரூ.62 கோடி அதிகரிப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: பொன்னேரி அடுத்த ஞாயிறு கிராமத்தில், சில மாதங்களுக்கு முன் பூமிக்கடியில் சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டு பொதுமக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இங்கு கோயில் கட்டித்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஞாயிறு கிராமத்தில் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. அந்த இடத்தில் கோயில் கட்ட வேண்டும் என்ற மக்களின் கோரிக்கை முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று கோயில் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

அருமந்தை கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாசலபதி கோயிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும். கோயில் சிலைகளை பாதுகாப்பதற்காக 1850க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுவதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு 700க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பெட்டக அறைகள் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 2024ம் ஆண்டிற்குள் சிலைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு பெட்டக அறைகள் கட்டுமான பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் வைப்புத்தொகை அதிமுக ஆட்சியின் இறுதியில் ரூ.458 கோடியாக இருந்தது. தற்போது, திமுக ஆட்சியில் வைப்புத்தொகை மேலும், ரூ.62 கோடி அதிகரித்து ரூ.520 கோடியாக உள்ளது. கோயில் வைப்புநிதியில் இருந்து பல கோடி ரூபாய் எடுக்கப்பட்டதாக கூறும் குற்றச்சாட்டில்  துளியும் உண்மையில்லை.  இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது, பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர்,  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராசன், அறநிலையத்துறை  ஆணையர் முரளிதரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர்  உடனிருந்தனர்.

Related Stories: