×

தேர்தல் விதிகளை மீறியதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் மீதான வழக்கிற்கு தடை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை:  2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ராஜகண்ணப்பன் போட்டியிட்டார். தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேர்தல் அலுவலர்கள் அளித்த புகார்களின் அடிப்படையில் 5 காவல் நிலையங்களில் ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகளை ரத்து செய்யக் கோரியும், விசாரணைக்கு தடை விதிக்க கோரியும், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க கோரியும் அமைச்சர் ராஜகண்ணப்பன் சார்பில் ஐகோர்ட்டில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார்.  

இந்த வழக்குகள் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜகண்ணப்பன் தரப்பில் வழக்கறிஞர்கள் வைரமணி மற்றும் ராமசாமி ஆகியோரும், காவல்துறை தரப்பில் அரசு வழக்கறிஞர் சந்தோஷும் ஆஜராகி வாதிட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி, ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் ராஜ கண்ணப்பனுக்கு எதிராக நடைபெறும் வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் போலீசார் 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டுமென்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

Tags : Minister ,Rajakannapan ,Madras High Court , Ban on case against Minister Rajakannappan for violation of election rules: Madras High Court order
× RELATED வாக்குப்பதிவு இயந்திரங்களில்...