×

அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓ.பி.எஸ் தரப்பு தொடர்ந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்: ஐகோர்ட்டில் எடப்பாடி பழனிச்சாமி பதில்மனு

சென்னை: கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்தும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை நியமித்தும், பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், ஜே.சிடி.பிரபாகர் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதில் தாக்கல் செய்துள்ளார். பதில்மனுவில், கட்சியை தற்போது இடைக்கால பொதுச்செயலாளரே பிரதிநிதித்துவப்படுத்தும் நிலையில்,  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று இந்த வழக்கில் பிரதிவாதிகள் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கை தாக்கல் செய்திருக்கும் மனோஜ் பாண்டியன், தற்போது கட்சியின் உறுப்பினரே அல்ல. கடந்த 2022 ஜூன் 23ம் தேதி பொதுக்குழு கூட்டத்துக்கு முன் ஜூன் 14ம் தேதி நான்கு மணி நேரம் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சி மீண்டும் ஒற்றைத் தலைமைக்கு மாற வேண்டும் என அனைத்து மாவட்டச் செயலாளர்களும் விருப்பம் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்  தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, என்னை இடைக்கால பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையமும் பதிவு செய்து கொண்டது. கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்ற அடிப்படையில் சட்ட ஆணையம் எனக்கு கடிதம் எழுதி உள்ளது. அதே அடிப்படையில் ஜி 20 மாநாட்டுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால் மனுதாரர் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். பெரும்பான்மையினரின் முடிவை சிறுபான்மையினர் முடக்க முடியாது.  

கட்சி விதிகளில் திருத்தங்கள் செய்ய பொதுக்குழுவுக்கு மட்டுமே உள்ள அதிகாரத்தை மனுதாரர் கேள்வி எழுப்ப முடியாது. கட்சியின் பொதுக்குழு நடந்து கொண்டிருந்த போது கட்சி அலுவலகத்தை தாக்கிய மனுதாரருக்கு பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடர எந்தவித அடிப்படை உரிமையும் இல்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து செயல்பட முடியாது என்ற வாதத்தை நீதிமன்றங்கள் உறுதி செய்துள்ள நிலையில்,  கட்சியில் இருந்து என்னை நீக்க அவர்களுக்கு அதிகாரம் உள்ளது என கூற முடியாது. கட்சி விதிகள் திருத்தம், இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்த தீர்மானங்களால் மனுதாரர் எந்த பாதிப்புக்கும் ஆளாகவில்லை என்பதால் எந்த நிவாரணமும் கோர முடியாது. பொதுக்குழு தீர்மானங்கள் அமலுக்கு  வந்து எட்டு மாதங்களுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு செல்லாததாகி விட்டது. எனவே இந்த எவழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று  கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

Tags : OPS ,AIADMK ,committee ,Edappadi Palaniswami , OPS' case against AIADMK general body resolution should be dismissed with penalty: Edappadi Palaniswami's petition in IC
× RELATED ஓபிஎஸ் அணியில் இருந்து ஜேசிடி...