மெட்ரோ ரயில் பணி காரணமாக மெரினாவில் உள்ள காந்தி சிலை தற்காலிக இடமாற்றம்: அதிகாரி தகவல்

சென்னை: மெட்ரோ ரயில் பணிக்காக, மெரினாவில் உள்ள காந்தி சிலை தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுகிறது என அந்நிறுவன அதிகாரி கூறினார். சென்னையில் 2ம் கட்டமாக, மூன்று வழித்தடங்களில் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. அவற்றில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரை 26.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் திட்டமிட்டு நடைபெற்று வருகிறது. இந்த வழித்தடத்தில் மொத்தம் 23 ரயில் நிலையங்கள் அமைய உள்ளன. இந்நிலையில் சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான காந்தி சிலை, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறும் இடத்துக்கு அருகில் உள்ளது.

எனவே, அந்த சிலையை தற்காலிகமாக வேறு இடத்தில் மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தற்போது, காமராஜர் சாலையில் சுரங்கம் தோண்டும் பணிகள் தொடங்கி நடந்துவருகிறது. இந்த பணிகள் நடைபெறும் இடத்தில்தான் காந்தி சிலை அமைந்துள்ளது. பழமையான இந்த சிலையை வெகு தூரம் எடுத்து சென்றால் சிலை சேதமடையலாம் என்பதால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது, சிலை இருக்கும் இடத்தில் இருந்து 20 மீட்டர் தொலைவில், இன்னும் சில தினங்களில் ராட்சத கிரேன் மூலம் காந்தி சிலை பாதுகாப்பாக வைக்கப்படும். மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்த பிறகு மீண்டும் காந்தி சிலை அதன் இடத்தில் வைக்கப்படுகிறது.

Related Stories: