×

திருப்பதி திருமலை தேவஸ்தானம் போன்று சென்னையில் பிரமாண்ட கோயில் மிக விரைவில் கட்டப்படும்: ஒய்.வி.சுப்பா ரெட்டி, ஏ.ஜே.சேகர் பேட்டி

சென்னை:திருமலை, திருப்பதி தேவஸ்தானம் தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி கூறியதாவது: சென்னை தி.நகர் ஜி.என். ரோட்டில் பத்மாவதி தாயார் கோயிலை 2 ஆண்டில் கட்டி முடித்துள்ளோம். ரூ.10 கோடியில் கோயில் திட்டமிடப்பட்டு ரூ.15 கோடியில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற உள்ளது. திருப்பதி கோயிலை போன்று அனைத்து பூஜைகளும் இங்கு தினசரி நடைபெறும். திருப்பதி தேவஸ்தானத்துக்கு என்று பிரத்யேக சிலை தயாரிப்பு கூடம் உள்ளது. அந்த கூடத்தில் இருந்துதான் சிலைகள் தயாரிக்கப்பட்டு கொண்டு வரப்பட்டுள்ளன.

சென்னையில் மிக விரைவில் வெங்கடேஸ்வரா கடவுளுக்கு நிரந்தர கோயில் கட்ட உள்ளோம். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் உள்ளது போன்றே கோயில் அமைக்கப்படும். புதிய வெங்கடேஸ்வரா கோயில் அமைப்பதற்கான நிலம் வாங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுக்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற கோயில்களை கட்டுவதற்கான கோரிக்கைகளை வைத்திருக்கிறோம். சாமி தரிசனம் செய்ய முடியாத, பட்டியல் இனத்தவர்கள் இருக்கக்கூடிய பகுதிகளிலும் கோயில்களை கட்ட முடிவு செய்திருக்கிறோம் என்றார்.

தமிழ்நாடு- புதுச்சேரி உள்ளூர் ஆலோசனை குழு தலைவர் ஏ.ஜே.சேகர் கூறியதாவது: கும்பாபிஷேகம் இன்று காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் நடைபெறும். தொடர்ந்து 2 மணி நேரம் கும்பாபிஷேகத்திற்கான நிகழ்ச்சி நடைபெறும். இதில் முக்கிய பிரமுகர்கள் மட்டும் கலந்துகொள்வார்கள். காலை 11 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். இரவு வரை சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் பக்தர்கள் கும்பாபிஷேகம் முடிந்து 11 மணிக்கு மேல் சாமி தரிசனம் செய்ய வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

காலையில் வந்து சிரமப்பட  வேண்டாம். பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது‌. அதனால் சுலபமாக தரிசனம் செய்யலாம்.  சாமி தரிசனம் செய்ய வருபவர்களுக்கு காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, லட்டும் வழங்கப்படும். கோயில் கட்டவும், கும்பாபிஷேகத்திற்கும் அரசு பல்வேறு உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளது. இதற்காக தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்றார்.

Tags : Tirupati Tirumala Devasthanam ,Chennai ,YV ,Subba Reddy ,AJ Shekhar , Big temple like Tirupati Tirumala Devasthanam to be built in Chennai very soon: YV Subba Reddy, AJ Shekhar Interview
× RELATED சென்னை மெரினா கடற்கரை வருவோருக்கு நேரக் கட்டுப்பாட்டு?