×

4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் ராகுலை பேசவிடாமல் பாஜ அமளி: அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்

புதுடெல்லி: ராகுல்காந்தியை பேசவிடாமல் பா.ஜ மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை சந்தித்து ராகுல்காந்தி கோரிக்கை வைத்தார். லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்ட வலியுறுத்தியும் ஆளும்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  எதிர்க்கட்சியினர் அதானி மோசடி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு  விசாரணை கேட்டு பதிலுக்கு அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 3 நாட்களாக அவை நடவடிக்கைகள் முடங்கின. லண்டன் சென்ற ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றம் வந்தார். அவரைக்கண்டதும் பா.ஜ எம்பிக்கள் மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள் என்று கோஷம் எழுப்பினார்கள்.  

இந்த  நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அதானி  விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பினர்.  இதனால் அவையில் கூச்சல்  குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா அனைவரையும் அமைதிப்படுத்த  முயன்றார். உறுப்பினர்கள் கேட்காததால் பிற்பகல் 2 மணி வரை அவையை  ஒத்திவைத்தார். அதன்பின்னர் அவை கூடியதும் மீண்டும் இருதரப்பினரும்  அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உறுப்பினர் கோஷம் எழுப்பியதால் தொடர்ந்து 4வதுநாளாக  எந்தவித அலுவலும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது. இதை தொடர்ந்து மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரியுடன் சென்று சபாநாயகர்  ஓம்பிர்லாவை அவரது அறையில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்கள் தன்மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி தரும்படி அவர் கோரிக்கை வைத்தார்.

பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில்  அவர்  செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது லண்டன் சுற்றுப்பயணத்தில் நமது  நாட்டை பற்றியோ அல்லது நாடாளுமன்றத்தை பற்றியோ தரக்குறைவாக எதுவும்  பேசவில்லை. மக்களவையில் பேச வாய்ப்பு கேட்டும் எனக்கு கிடைக்கவில்லை. நான்  சொன்னதையோ அல்லது நான் உணர்ந்ததையோ சபையில் முன் வைக்க வேண்டும் என்ற  எண்ணத்தில் இன்று காலை நாடாளுமன்றத்துக்குச் சென்றேன். நாடாளுமன்றத்தில் 4  அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர். எனவே அதற்கு    நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பதில்அளித்து பேசுவது எனது உரிமை  என்றும் நான் சபாநாயகரிடம் தெரிவித்தேன். ஆனால் சபாநாயகர் எந்தவித  உறுதியும் தராமல் சிரித்தார். இன்று நாடாளுமன்றத்தில் பேச எனக்கு அனுமதி  கிடைக்குமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும் அனுமதி  கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஒரு எம்.பி. என்ற முறையில்  நான் எனது அறிக்கையை முதலில் அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். அதன் பிறகு  உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதில்  நான் மகிழ்ச்சியடைவேன்.  இந்தியாவில் ஜனநாயகம் இருந்தால், நாடாளுமன்றத்தில்  நாளை(இன்று) எனது கருத்தை என்னால் கூற முடியும். 4 பாஜ   தலைவர்கள் ஒரு  நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த  பிறகு, அந்த  நான்கு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட அதே வாய்ப்பு, அந்த  நாடாளுமன்ற  உறுப்பினருக்கும் வழங்கப்படப் போகிறதா அல்லது அவருக்கு  வாயை மூடிக்கொள்ளச்  சொல்லப் போகிறதா என்பதான் தற்போது இந்த  நாட்டின் முன் உள்ள கேள்வி.

ஆனால்  நான் நாடாளுமன்றத்தில் பேசுவதை பா.ஜவினர் விரும்ப மாட்டார்கள்.  அப்படி  பேச அனுமதி அளிக்காவிட்டால் நாளை(இன்று) லண்டன் பேச்சு குறித்து  உங்களிடம்  விளக்கம் அளிப்பேன். நாடாளுமன்றத்தில் பேசினால் மோடிக்கும்,  அதானிக்கும்  என்ன தொடர்பு உள்ளது என்பது தான் என்னுடைய முக்கியமான  கேள்வியாக  இருக்கும். அரசும், பிரதமரும் அதானி விவகாரத்தைப் பார்த்து   அச்சமடைந்துள்ளனர். ஏற்கனவே அதானி குறித்து கேட்ட பல கேள்விகளுக்கு பிரதமர்   மோடி இப்போது வரை பதில் அளிக்கவில்லை. அந்த அச்சத்தின் காரணமாகவே அவர்கள்   இந்த நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். மோடிக்கும் அதானி குழுமத்  தலைவர் கவுதம் அதானிக்கும் இடையேயான உறவு குறித்து சில அடிப்படைக்  கேள்விகளை நான் எழுப்பியிருக்கிறேன். அந்த கேள்விகளை மீண்டும்  எழுப்பக்கூடாது என்பதற்காகத்தான் பிரதமரின் யோசனை அடிப்படையில் இந்த  நான்கைந்து அமைச்சர்கள் இப்படி செயல்பட்டு இருக்கிறார்கள். எனது கேள்வி  போலி நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்ட பணம் யாருக்கு சொந்தம்?.  இந்த  ஷெல் நிறுவனங்களில் பணம் முதலீடு செய்த இந்த தெரியாத நபர் யார்?.  இவ்வாறு  அவர் கூறினார்.

Tags : paja amali , Parliament deadlocked for 4th day without allowing Rahul to speak: BJP asks Lok Sabha Speaker for permission to respond to ministers' allegations
× RELATED 4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்...