ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு: அரசு அறிவிப்பு

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் பணிபுரியும், தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளிகளில் காலியாகவுள்ள 157 ஆசிரியர் பணியிடங்களை இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக முறையே ரூ.8000, ரூ.9,000 மற்றும் ரூ.10,000 என்ற ஊதியத்தில், முற்றிலும் தற்காலிகமாக சில நிபந்தனைகளின் அடிப்படையில் நிரப்பிட ஆணை வெளியிடப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் காலியாக உள்ள 830 ஆசிரியர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 மாதத் தொகுப்பூதியமாக தமிழ்நாடு அரசுப் பணியாளர்களுக்கு தற்காலிகமாக சில நிபந்தனைகளின் அடிப்படையில் நிரப்ப ஆதிதிராவிடர் நல இயக்குநருக்கு அனுமதி வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

தொடக்கக் கல்வித்துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறையில் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.12,000 மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் ரூ.15.000 மற்றும் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000 மதிப்பூதியம் வழங்கி ஆணை வெளியிடப்பட்டுள்ளது. பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் தற்போது தொகுப்பூதியத்தில் பணியாற்றும் 221 ஆசிரியர்களுக்கும் மற்றும் பணியிடங்கள் மற்றும் 2022-2023ம் ஆண்டு காலியாக உள்ள 194 பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களாக நியமனம் செய்யப்படுபவர்களையும் சேர்த்து மொத்தம் 415 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஒரு இடைநிலை ஆசிரியருக்கு ரூ.12,000 மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.15,000 மற்றும் ஒரு முதுகலைப்பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000 தொகுப்பூதியத்தினை உயர்த்தி வழங்கப்படுகிறது. ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நல இயக்குநர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் பள்ளிகளில் நிரப்பப்பட்ட ஒப்பந்த ஆசிரியர்களுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ரூ.12000 மற்றும் ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு மதிப்பூதியம் ரூ.15,000 மற்றும் ஒரு முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.18,000 என திருத்திய மதிப்பூதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: