சென்னை: தமிழ்நாட்டில் மின் நுகர்வு, நேற்று முன்தினம் உச்சத்தை எட்டிய நிலையிலும், எந்த தடையுமின்றி மின்சாரம் வழங்கப்பட்டதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில், தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதன் காரணமாக நிறுவனங்கள், வீடுகளில் ஏசி, ஏர்கூலர் போன்ற பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. எதிர்பாராதவிதமாக மின் நுகர்வு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு மின் நுகர்வு, மார்ச் மாதத்தில் 18,100 மெகாவாட்டாகவும், ஏப்ரல் மாதத்தில் 18,500 மெகாவாட்டாகவும் இருக்கும் என மின் வாரியம் கணக்கிட்டுள்ளது. எினும், அதிகரிக்கும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் வாரியம் தயார் நிலையில் உள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மார்ச் 10ம் தேதி அதிகபட்சமாக 17,647 மெகாவாட் மின் நுகர்வு இருந்தது. மேலும் மார்ச் 14ம் தேதி மின் நுகர்வு 17,705 மெகாவாட் என்ற உச்சத்தை எட்டியது. அதை தொடர்ந்து மார்ச் 15ம் தேதி மின் நுகர்வு 17,749 மெகாவாட் என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 15ம் தேதி) மின் நுகர்வு, அதிகபட்சமாக 17,749 மெகாவாட் பதிவானது. இந்த தேவை எந்த மின் தடையுமின்றி ஈடு செய்யப்பட்டது. இதற்கு முந்தைய உட்சபட்ச நுகர்வு மார்ச் 14ம் தேதி 17,705 மெகாவாட். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
