ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை கன்னியாகுமரி வருகை: தலைமை செயலாளர் ஆலோசனை

சென்னை: இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, கடந்த மாதம் 18ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் கோவை ஈசா மையத்திற்கு சென்றார். இதையடுத்து, ேநற்று கேரள மாநிலம் கொச்சி வந்த அவர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை பார்வையிட்டார். நேற்று இரவு கொச்சியில் தங்கிய அவர் இன்று (17ம் தேதி) காலை, மாதா அமிர்தானந்தாமயி மடத்துக்கு செல்கிறார். பின்னர் திருவனந்தபுரத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். கேரளா நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், ஜனாதிபதி திரவுபதி முர்மு நாளை (18ம் தேதி) தனி ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரி வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்துக்கு செல்லும் அவர், தனி படகு மூலம் விவேகானந்தர்  நினைவு மண்டபம் சென்று பார்வையிடுகிறார். அங்கிருந்தபடி திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளார்.

பின்னர் விவேகானந்த கேந்திரா சென்று பாரத மாதா கோயிலில் வழிபடுகிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் அரசு விருந்தினர் மாளிகைக்கு திரும்புகிறார். பின்னர் கன்னியாகுமரியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் கேரளா செல்கிறார். அங்கிருந்து லட்சத்தீவுக்கு செல்கிறார். அங்கு கவரட்டி தீவில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். பின்னர், அங்கு மகளிர் சுய உதவி குழுவினரை சந்தித்து கலந்துரையாடுகிறார். இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிற்கு வருகை தருவதையொட்டி, முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசனை கூட்டம் நடந்தது.

Related Stories: