×

4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம் ராகுலை பேசவிடாமல் பாஜ அமளி: அமைச்சர்களின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்டார்

புதுடெல்லி: ராகுல்காந்தியை பேசவிடாமல் பா.ஜ மற்றும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து அமைச்சர்கள் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி அளிக்கும்படி சபாநாயகரை சந்தித்து ராகுல்காந்தி கோரிக்கை வைத்தார். லண்டன் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி நாடாளுமன்றத்தை அவமதித்து விட்டதாகவும், அதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் ஆளும்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டு வருகிறார்கள்.  

எதிர்க்கட்சியினர் அதானி மோசடி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு பதிலுக்கு அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 3 நாட்களாக அவை நடவடிக்கைகள் முடங்கின. லண்டன் சென்ற ராகுல் காந்தி நேற்று நாடாளுமன்றம் வந்தார். அவரைக்கண்டதும் பா.ஜ எம்பிக்கள் மன்னிப்பு கேள், மன்னிப்பு கேள் என்று கோஷம் எழுப்பினார்கள். இந்த நேரத்தில் காங்கிரஸ் எம்பிக்களும் அவையின் மையப்பகுதிக்கு வந்து அதானி விவகாரம் தொடர்பாக கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. சபாநாயகர் ஓம்பிர்லா அனைவரையும் அமைதிப்படுத்த முயன்றார். உறுப்பினர்கள் கேட்காததால் பிற்பகல் 2 மணி வரை அவையை ஒத்திவைத்தார்.

அதன்பின்னர் அவை கூடியதும் மீண்டும் இருதரப்பினரும் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை முன்வைத்து உறுப்பினர் கோஷம் எழுப்பியதால் தொடர்ந்து 4வதுநாளாக எந்தவித அலுவலும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது. இதை தொடர்ந்து மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர்ரஞ்சன் சவுத்திரியுடன் சென்று சபாநாயகர் ஓம்பிர்லாவை அவரது அறையில் ராகுல்காந்தி சந்தித்து பேசினார். அப்போது அமைச்சர்கள் தன்மீது வைத்த குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்க அனுமதி தரும்படி அவர் கோரிக்கை வைத்தார்.

பின்னர் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எனது லண்டன் சுற்றுப்பயணத்தில் நமது  நாட்டை பற்றியோ அல்லது நாடாளுமன்றத்தை பற்றியோ தரக்குறைவாக எதுவும் பேசவில்லை. மக்களவையில் பேச வாய்ப்பு கேட்டும் எனக்கு கிடைக்கவில்லை. நான் சொன்னதையோ அல்லது நான் உணர்ந்ததையோ சபையில் முன் வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நாடாளுமன்றத்துக்குச் சென்றேன். நாடாளுமன்றத்தில் 4  அமைச்சர்கள் என் மீது குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளனர்.

எனவே அதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் பதில்அளித்து பேசுவது எனது உரிமை என்றும் நான் சபாநாயகரிடம் தெரிவித்தேன். ஆனால் சபாநாயகர் எந்தவித உறுதியும் தராமல் சிரித்தார். இன்று நாடாளுமன்றத்தில் பேச எனக்கு அனுமதி கிடைக்குமா என்பதும் உறுதியாகத் தெரியவில்லை. இருப்பினும் அனுமதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒரு எம்.பி. என்ற முறையில் நான் எனது அறிக்கையை முதலில் அவையில் தெரிவிக்க விரும்புகிறேன். அதன் பிறகு உங்கள் அனைவருடனும் கலந்துரையாடுவதில் நான் மகிழ்ச்சியடைவேன்.  

இந்தியாவில் ஜனநாயகம் இருந்தால், நாடாளுமன்றத்தில் நாளை(இன்று) எனது கருத்தை என்னால் கூற முடியும். 4 பாஜ தலைவர்கள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த பிறகு, அந்த நான்கு உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்ட அதே வாய்ப்பு, அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வழங்கப்படப் போகிறதா அல்லது அவருக்கு வாயை மூடிக்கொள்ளச் சொல்லப் போகிறதா என்பதான் தற்போது இந்த நாட்டின் முன் உள்ள கேள்வி. ஆனால் நான் நாடாளுமன்றத்தில் பேசுவதை பா.ஜவினர் விரும்ப மாட்டார்கள். அப்படி பேச அனுமதி அளிக்காவிட்டால் நாளை(இன்று) லண்டன் பேச்சு குறித்து உங்களிடம் விளக்கம் அளிப்பேன். நாடாளுமன்றத்தில் பேசினால் மோடிக்கும்,  அதானிக்கும் என்ன தொடர்பு உள்ளது என்பது தான் என்னுடைய முக்கியமான கேள்வியாக  இருக்கும். அரசும், பிரதமரும் அதானி விவகாரத்தைப் பார்த்து அச்சமடைந்துள்ளனர். அந்த அச்சத்தின் காரணமாகவே அவர்கள் இந்த நகைச்சுவை நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

* எதிர்க்கட்சிகள் ஆலோசனை திரிணாமுல் புறக்கணிப்பு
நாடாளுமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் கூடி தினமும் ஆலோசனை நடத்தி வருகின்றன. நேற்றும் இந்த ஆலோசனை நடந்தது. இந்த கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் கலந்து கொண்டன. ஆம்ஆத்மி  சார்பிலும் உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

* தவறிய ராகுல் திருத்திய ஜெய்ராம் கலாய்த்த பா.ஜ
ராகுல்காந்தி விளக்கம் அளித்த போது,’ நாடாளுமன்ற உறுப்பினரானதே துரதிர்ஷ்டவசம்’ என்று பேச ஆரம்பித்தது சர்ச்சையானது. உடனே அவர் அருகில் அமர்ந்து இருந்த மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தவறை திருத்தினார். இதை தொடர்ந்து ராகுல் தெளிவாக பேசினார். இந்த வீடியோவை பா.ஜ தற்போது வெளியிட்டு ராகுலை விமர்சனம் செய்துள்ளது.

* நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் மனித சங்கிலி
அதானி விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை கேட்டு நேற்று எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் நாடாளுமன்ற வளாகத்தில் மனித சங்கிலி அமைத்து போராட்டம் நடத்தினார்கள். கையில் பேனர்களை ஏந்தியபடி ஒன்றிய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினார்கள். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் பல்வேறு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் அனைவரும் பங்கேற்றனர்.

Tags : paja amali , Parliament deadlocked for 4th day without allowing Rahul to speak: BJP asks Lok Sabha Speaker for permission to respond to ministers' allegations
× RELATED 4வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்...