×

பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை கடத்திய 2 பேர் கைது

வேலூர்: வேலூர் அருகே பல கோடி மதிப்புள்ள ஐம்பொன் அம்மன் சிலை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் திருவண்ணாமலையில் இருந்து விற்பனைக்கு கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு சிலை கடத்தி விற்பனை செய்ய உள்ளதாக வேலூர் போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் வேலூர் அடுத்த அரியூர் மலைக்கோடி பகுதியில் நேற்று இரவு சப்-இன்ஸ்பெக்டர் ரேகா தலைமையிலான போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக பைக்கில் நின்று கொண்டிருந்த 2பேரை பிடித்து விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்து அங்கிருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை போலீசார் விரட்டிச் சென்று சாத்துமதுரை அருகே மடக்கி பிடித்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்த பையை சோதனை செய்தனர். அதில் காய்கறி எடுத்துச் செல்வது போல கருவேப்பிலைகளுக்கு இடையில் சிலை ஒன்று மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் புது வாணியங்குளத்தைச் சேர்ந்த கண்ணன்(41), திருவண்ணாமலை அடுத்த புதுமை மாதா நகர் சர்ச் தெருவை சேர்ந்த வின்சென்ட்ராஜ்(45) என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டது ஐம்பொன்னால் ஆன சிவகாமி அம்மையார் சிலை என்பதும், ஐம்பொன்னால் ஆன ஒன்றரை அடி உயரமும், ஐந்தரை கிலோ எடை கொண்டதும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கடத்தலுக்கு பயன்படுத்திய பைக் மற்றும் மூன்று செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
கைதான வின்சென்ட்ராஜ் எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருகிறார். இவருக்கு செஞ்சியை சேர்ந்த ஒருவர் இந்த சிலையை கொடுத்து விற்று தந்தால் அதற்கான கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து இந்த சிலையை திருவண்ணாமலையில் இருந்து வேலூர் மலைக்கோடியில் விற்பனை செய்ய கண்ணன் என்பவரை பைக்கில் அழைத்துக்கொண்டு வந்துள்ளார். வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரிடமாவது விற்பனை செய்யவும், இந்த சிலையை சுமார் ரூ.1.5 கோடிக்கு விற்பனை செய்யவும் திட்டமிட்டிருந்தனர். இதற்காக வரும்போது போலீசார் சோதனையில் சிக்கினர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலையின் மதிப்பு பல கோடி இருக்கும்.

இந்த சிலை கடத்தல் தொடர்பாக செஞ்சியை சேர்ந்தவரை தேடி வருகிறோம். மேலும் சிலை கடத்தலில் வேறு யாருக்கேனும் தொடர்பு இருக்கிறதா? என்பது குறித்தும் சிலை எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்த உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Aimbon Amman , Aimbon Amman statue, kidnapped, 2 arrested
× RELATED ரூ2 கோடி ஐம்பொன் அம்மன் சிலை மீட்பு: 4 பேர் கைது