பல்லாவரம் திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோயில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம்

பல்லாவரம்: பங்குனி பிரமோற்சவத்தை முன்னிட்டு, திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பல்லாவரம் அடுத்த திருநீர்மலை பகுதியில் புகழ்பெற்ற ரங்கநாதபெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இக்கோயிலில் இறைவன் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் என்னும் 4 நிலைகளில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் ஸ்தல அதிபதியான  நீர்வண்ண பெருமாளுக்கு பங்குனி பிரமோற்சவம் கடந்த வியாழக்கிழமை துவங்கி, 11 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை கருடசேவை நடைபெற்றது. இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, பெருமாள் மற்றும்  தாயாருக்கு பல வண்ண மலர்களால்   சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அபிஷேக ஆராதனையும் நடந்தது. விழாவில் கலந்துகொண்ட பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், காஞ்சிபுரம் மண்டல அறநிலையத்துறை இணை ஆணையர் வான்மதி, செங்கல்பட்டு மாவட்ட உதவி ஆணையர் லட்சுமி காந்தன், பாரதிதாசன், செயல் அலுவலர் கிருஷ்ணன் ஆகியோர், தேரை வடம்பிடித்து இழுத்து  துவக்கிவைத்தனர்.

அப்போது, கோவிந்தா... கோவிந்தா... என கோஷமிட்டபடி பக்தர்கள் தேரை இழுத்து சென்றனர்.  ஆங்காங்கே பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம்  வழங்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் சங்கர்நகர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories: