சமயபுரம் மாரியம்மன் கோயிலின் வைப்பு நிதி 20 மாதங்களில் ரூ.98.39 கோடி உயர்ந்து தற்போது ரூ.556.39 கோடியாக உள்ளது: அமைச்சர் சேகர்பாபு தகவல்

சமயபுரம்: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் வைப்பு நிதி கடந்த 20 மாதங்களில் ரூ.98.39 கோடி உயர்ந்து தற்போது  ரூ.556.39 கோடியாக உள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொன்மையான திருக்கோயில்களை புனரமைத்து பாதுகாத்திடும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்  இன்று (16.03.2023) இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயில், அருமந்தை அருள்மிகு பிரசன்ன வெங்கடேச பெருமாள் திருக்கோயில் திருப்பணிகள் தொடர்பாகவும், ஞாயிறு கிராமத்தில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்திற்கு புதிய திருக்கோயில் கட்டுதல் தொடர்பாகவும் களஆய்வு மேற்கொண்டார்.  

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தொன்மை வாய்ந்த திருக்கோயில்கள், கடந்த காலங்களில் பாராமுகமாக இருந்த திருக்கோயில்கள், 1,000 ஆண்டுகளுக்கு மேலான பராமரிப்பில்லாத திருக்கோயில்களை எல்லாம் நேரடியாக சென்று களஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டிருந்தார்.  மேலும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோயில்களை புனரமைத்து பராமரிக்க  ரூபாய் 100 கோடியை வழங்கினார்கள். அதில் ரூ.58 கோடி மதிப்பீட்டில் 104 திருக்கோயில்களை திருப்பணி மேற்கொள்ள அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.42 கோடி பணிகளுக்கு விரைவில் அரசாணை பிறப்பிக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், ஞாயிறு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு புஷ்பரதேஸ்வரர் திருக்கோயிலுக்கு 2006 ல் குடமுழுக்கு நடைபெற்று ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் கடந்த நிலையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலும், இத்திருக்கோயிலின்   திருக்குளத்தினை மேம்பாடு செய்திடவும் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான காலி இடத்திற்கு சுற்றுசுவர் அமைக்கவும் உத்தரவிட்டுள்ளோம். இதற்கு கூடுதல் நிதி தேவையெனில்  ஆணையரின் பொது நல நிதியிலிருந்து வழங்கப்படும். மேலும், இக்கிராமத்தில் மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 4 கிரவுண்ட் இடத்தில் பூமிக்குள் புதைந்த நிலையில் இருந்த சிவலிங்கம் தற்போது வெட்டவெளியில் அமைக்கப்பட்டு தினந்தோறும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டு வருகிறது. அந்த பகுதியில் ஒரு திருக்கோயில் அமைத்து தர வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த வேண்டுகோளை ஏற்று இன்று களஆய்வு செய்து மக்களின் கருத்தை கேட்டறிந்தோம். இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, புதிய திருக்கோயிலை உருவாக்குவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள இருக்கின்றோம். சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்ற அனுமந்தை, அருள்மிகு வெங்கடேச பெருமாள் திருக்கோயிலுக்கு திருப்பணிகள் மேற்கொண்டு குடமுழுக்கு நடத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த திருக்கோயிலுக்கு சொந்தமான சுமார் 90 ஏக்கர் நிலங்களை பயன்படுத்தி கொண்டிருப்பவர்களிடம் முறையான வாடகை வசூல் செய்து திருக்கோயிலின் மேம்பாடு மற்றும் அன்றாட வழிபாட்டிற்கு பயன்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராலாம் என்ற திட்டத்தின் கீழ் இதுவரை 26 நபர்கள் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றார்கள். அதில் ஆதிதிராவிடர் முதல்  தகுதியுள்ள எந்த வகுப்பினராக இருந்தாலும், முறையாக தேர்வு நடத்தி, பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களை சரிபார்த்து, அனுபவம் இருப்பவர்களை அர்ச்சகர்களாகவும், உதவி அர்ச்சகர்களாகவும் நியமித்திருக்கின்றோம். பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் குடமுழுக்கை பொறுத்தவரையில் 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கின்போது திருக்கோயிலில் நடைபெற்ற நடைமுறையை பின்பற்ற வேண்டும் என்று அர்ச்சகர்கள் கோரிக்கை வைத்திருந்தார்கள்.

அன்றைக்கும் இதேபோல் திருவிழா காலம் என்பதால் மூன்று நாட்களோடு குடமுழுக்கை நடத்தி முடித்தார்கள். அதே முறையை தொடர வேண்டும் என்ற கோரிக்கை வைத்த போது மூன்று நாட்களுக்கு 11 கலசங்களோடு குடமுழுக்கு பணிகளும், ஒரு கலசத்தோடு 48 நாட்கள் மண்டல பூஜையும் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. இடையில் தைப்பூசமும் சேர்ந்து வருவதால் இந்த நிகழ்ச்சிகள் தடைபடக்கூடாது என்பதற்காக ஒரு கலச பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்தோம். இடையில் சிலர் நீதிமன்றத்தை அணுகினர். நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 11 கலச பூஜையை செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என்ற ஒப்புதல் அளித்தவுடன் நீதிபதி அந்த வழக்கை அதோடு முடித்து வைத்தார்.

யார் சொல்லியும், யாருடைய அழுத்தத்தின் காரணமாகவும் 11 கலசங்களோடு பூஜை நடைபெறவில்லை. பல லட்சம் மக்கள் கண்டுகளித்த அருள்மிகு பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் குடமுழுக்கினை சிறு அசம்பாவிதமும் இல்லாமல் சிறப்பாக நடத்தி முடித்தோம். இது போன்று சிறந்த வகையில் நடந்தால் அதற்கு உரிமை கொண்டாடுவதற்கு பலர் முன் வருவார்கள். திருப்பணிகள் எப்படியெல்லாம் நடைபெற்றது, குடமுழுக்கு எந்த அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது என்பதை பழனி முருகனும், இறையன்பர்களும் அறிவார்கள். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு சுமார் 1850 உலோகத் திருமேனி பாதுகாப்பு அறைகள் அமைத்திட ஒப்பந்தம் கோரப்பட்டு தற்போது 700 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு அறைகள் அமைத்திட ஆணை வழங்கப்பட்டு பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன.

வருகின்ற 2024க்குள் திருமேனிகளை பாதுகாக்கின்ற வகையில் அனைத்து பாதுகாப்பு அறைகளும் முழுமையாக கட்டித் தரப்படும். சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலின் வைப்பு நிதியை பொறுத்தளவில் 2018 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின்படி ரூ.13 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது வரையில் ரூ.9 கோடி 80 லட்சம் அளவிற்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த திருக்கோயிலில் 01.07.2021 அன்று ரூ.458 கோடி நிரந்தர வைப்பு நிதியில் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது அதாவது, 28.02.2023 அன்று வரை ரூ.556.39 கோடி வைப்பு நிதியாக உள்ளது. அதாவது, இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ரூ.98.39 கோடி வைப்பு நிதியில் கூடுதலாக வைக்கப்பட்டுள்ளது. வைப்பு நிதியிலிருந்து பெருந்திட்ட வரைவிற்கு நிதி எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்த ஆட்சி ஆன்மீகத்திற்கு எதிரான ஆட்சி என்ற நிலையை மக்களிடையே உருவாக்க சிலர் முயற்சித்தார்கள். முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் அந்த நிலையை தடுத்து, தவிடு பொடியாக்கியதோடு,  ஆன்மீகவாதிகளும், இறையன்பர்கள் போற்றக்கூடிய வகையில் அமைந்துள்ளதால்  இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு ஒருகால பூஜை திட்டத்தில் இருந்த 12,597 திருக்கோயில்களின் வைப்பு நிதி  ஒரு லட்ச ரூபாயை ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்கியுள்ளோம். கடந்தாண்டு 2,000 திருக்கோயில்களை ஒருகால பூஜை திட்டத்தில் சேர்த்திட மாண்புமிகு  முதலமைச்சர் அவர்கள் ரூ.40 கோடி அரசு மானியமாக வழங்கினார். மேலும், ஒருகால பூஜை திட்டத்தில் உள்ள திருக்கோயில்களின் அர்ச்சகர்களுக்கு  மாதந்தோறும்  ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

திருக்கோயில்களையும், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களின் நலன்களையும் காக்கும் அரசாக தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இருக்கின்ற அரசு திகழ்கிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டாகும். சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது.  இத்திருக்கோயிலுக்கு வருகை  புரிவதற்கும், திரும்ப செல்வதற்கும் தனித்தனி வழிகள் ஏற்பாடு செய்திடவும், திருக்கோயிலில் மண்டபம் கட்டிடவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். திருக்குளத்தை சிறந்த முறையில் சீரமைக்க உள்ளோம். அதிகரித்து வரும் பக்தர்களின் தேவைக்கேற்ப பல திட்டங்களை உருவாக்கி கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், விழாக் காலங்களில் தனி  நபர்கள் வசூல் வேட்டை நடத்துவதையும் தடுத்திடவும்  தேவையான அனைத்து நடவடிக்கைகளை காவல் துறை மற்றும் வருவாய்த் துறையினரோடு ஒருங்கிணைந்து இந்து சமய அறநிலைத்துறை மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

Related Stories: