சென்னை: கிராமங்களிலும் கிரிக்கெட் வளர்ந்துள்ளது, இதை சாத்தியமாக்கிய அரசுக்கு நன்றி என்று கிரிக்கெட் வீரர் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் சார்பில் கிரிக்கெட் அகாடமி நெல்லையில் தொடங்கப்பட்டது. புதிய கிரிக்கெட் அகாடமி துவக்க விழா நெல்லையில் சங்கர் நகரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது.
இதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் பாலாஜி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் பேசினார். அவர் பேசுகையில்; கிராமப் பகுதிகளில் கிரிக்கெட் நன்றாக வளர்ந்துள்ளது. நட்சத்திர வீரர் தோனி கிராமத்தில் இருந்துதான் வந்துள்ளார். இப்போது தலைசிறந்த வீரராக உள்ளார். கடந்த காலங்களில் பெருநகரங்களில் இருந்துதான் கிரிக்கெட் வீரர்கள் வந்துள்ளார்கள்.
ஆனால், இன்று கிராமத்தில் இருந்தும் கிரிக்கெட் வீரர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள். கிரிக்கெட்டுக்கு தற்போது நிறைய வாய்ப்புகள் உள்ளது. பள்ளி அளவில் அதிக அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றது. சிஎஸ்கேவின் ஜூனியர் சூப்பர் கிங்ஸ் போட்டிகளில் 30 மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர். அதில், வெற்றி பெறும் சிறந்த அணி தேர்ந்தெடுக்கப்படுகிறது.
போட்டியில் சிறப்பாக விளையாடிய 11 பேரை இங்கிலாந்து போன்ற வெளிநாடுகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு கிராமங்களில் எதிர்பார்ப்புகளையும் தாண்டி கிரிக்கெட் வளர்ந்துள்ளது. இதை சாத்தியமாக்கிய அரசுக்கும், சிஎஸ்கே அகாடெமிக்கும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.
