×

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் 4வது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்..!!

டெல்லி: ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது. தொடங்கிய சில நிமிடங்களிலேயே மக்களவை மற்றும் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்.13ம் தேதி வரை நடைபெற்றது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், மக்களவையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ஆளுங்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். இதேபோல், அதானி குழும முறைகேடு தொடர்பாக விசாரணை கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் இருக்கைகளை விட்டு வெளியேறி அவைத்தலைவர் இருக்கை அருகே முழக்கமிட்டனர். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கத்தால் 4வது நாளாக நாடாளுமன்றம் முடங்கியது.  நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாஜக திட்டமிட்டு நாடாளுமன்றத்தை முடக்குவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. அதானி விவகாரத்தை மறைப்பதற்காக ஆளுங்கட்சியினர் நாடாளுமன்றத்தை முடக்குகின்றனர் என காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டினார்.  ஏற்கனவே கடந்த 3 நாட்களாக விவாதம் எதுவும் நடக்காமல் நாடாளுமன்றம் முடங்கியிருந்தது நினைவுகூரத்தக்கது.


Tags : Ruling Party, Opposition MPs, Slogan, Parliament
× RELATED இந்தியாவில் நேற்று பதிவான அதிகபட்ச...