×

வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காடுகளில் வறண்டு கிடக்கும் தடுப்பணைகளால் ஊருக்குள் புகுந்து வரும் வனவிலங்குகள்

வேலூர்: வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் காடுகளில் வறண்டு கிடக்கும் தடுப்பணைகளால் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகிறது. அதேசமயம் சமூக விரோதிகளிடம் சிக்கி இறைச்சியாகிறது. சாலையோரங்களில் மட்டும் தண்ணீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. எனவே காடுகளில் அதிகளவில் தண்ணீர் தொட்டி வைத்து வனவிலங்குகளை பாதுகாக்க கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு, வடகிழக்கு பருவ மழைகள் பெரும்பாலான மாவட்டங்களில் சாராசரியாக பெய்தது. ஆனால் சில மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட குறைவாக பெய்தது. வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் மழை குறைவாக பெய்தது. இந்த மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள இயற்கை சூழலை கண்டு ரசிக்க, சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழை பெய்யும் போது வனம் பச்சை  பசேல் என்று பசுமையாக இருக்கும். அதே நேரத்தில்  வெயிலின் தாக்கம்  ஆரம்பிக்கும்போது வனத்தில் உள்ள மரக்கிளைகளில் இருந்து இலைகள்  உதிர்ந்தோடுகிறது. வறட்சியால் நீரோடைகள் மற்றும் தடுப்பணைகள் வற்றிவிடுகிறது.

 கடந்த  ஆண்டு தென்மேற்கு பருவமழையும்  அதன்பின் வடகிழக்கு பருவமழையும் சில மாதமாக தொடர்ந்து பெய்தது.  இதன்காரணமாக, வனத்தில் உள்ள செடிக்கொடிகள், மரங்கள் பலமாதமாக பச்சை  பசேலென காட்சியளித்தது. இந்த நிலையே கடந்த ஜனவரி மாதம் வரையிலும் நீடித்தது. இதற்கிடையே,  கடந்த இரண்டு மாதமாக போதிய மழையில்லாததால், வனப்பகுதியில் மீண்டும் வறட்சி  ஏற்பட துவங்கியுள்ளது. தற்போது இரவு நேரத்தில் பனிப்பொழிவு குறைந்து  இருப்பதுடன், பகல் நேரத்தில் வெயிலின் தாக்கமும் அதிகமாகியுள்ளது. இதனால்,  பனிக்கும், வெயிலுக்கும் செடிக்கொடிகள் மற்றும் மரங்கள் காய்ந்த நிலையை  அடைந்தது.  

இதில் வனத்தின் பல இடங்களில்,  வறட்சியால் தீ பரவும்  அபாயம் ஏற்பட்டுள்ளது.  தற்போது மீண்டும் வறட்சி துவக்கத்தால் பல மரங்களில்  இருந்து இலைகள் உதிர துவங்கியுள்ளன. கடந்த 2 மாதங்களில் ஆறு, குளம், குட்டைகள் பெரும்பாலும் வறண்டு காணப்படுகிறது. ஏரிகள், குளங்களில் மட்டும் தண்ணீர் உள்ளதை தற்போது பார்க்க முடிகிறது. மக்கள் பயன்படுத்தும் நீர்நிலைகளின் நிலையே இப்படியென்றால் அடர்ந்த வனங்களுக்குள் நிலைமை மோசமாக உள்ளது.

வேலூர் மாவட்டம் சுமார் 5 ஆயிரத்து 922  சதுர கி.மீ. பரப்பளவு கொண்டது. இதில் வனப்பகுதி 1,743 சதுர கி.மீ.  பரப்பளவில் அமைந்துள்ளது.  மாவட்டத்தில் வனப்பகுதி வேலூர் மற்றும்  திருப்பத்தூர் வனக்கோட்டங்களாக பிரிந்துள்ளன. வேலூர் வனக்கோட்டத்தில் 1  லட்சத்து  272.220 ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதி உள்ளது. இதில் 99,736.415  ஹெக்டேர் பரப்பளவில் காப்புக் காடுகள் உள்ளன. 535.805 ஹெக்டேர் பரப்பளவில்  நிலப்பரப்பு உள்ளது. அதேபோல் திருப்பத்தூர் வனக்கோட்டத்தில் 75,052.520  ஹெக்டேர் பரப்பளவில் வனப்பகுதியும், அதில் 71,126.605 ஹெக்டேர் பரப்பளவில்  காப்புக் காடுகளும், 3,925.915 ஹெக்டேர் பரப்பளவில் நிலப்பரப்பும்  அமைந்துள்ளது.

வேலூர் வனக்கோட்டத்தில் வேலூர், ஆற்காடு, குடியாத்தம்,  பேர்ணாம்பட்டு, ஒடுகத்தூர், அமிர்தி ஆகிய வனச் சரகங்களும், திருப்பத்தூர்  வனக்கோட்டத்தில் திருப்பத்தூர், ஆம்பூர், சிங்காரப்பேட்டை, ஆலங்காயம் ஆகிய  வனச்சரகங்களும் அமைந்துள்ளன.  திருப்பத்தூர் வனச்சரகத்தில் உள்ள சந்தனமரக்  கிடங்கு நாட்டிலேயே புகழ்பெற்றதாகும். அமிர்தி வன விலங்கு சரணாலயம் வேலூர்  மாவட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜவ்வாதுமலை தொடர்ச்சியும் உள்ளது. இந்த மலை தொடர்ச்சி ஒட்டியுள்ள வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட வனக்கோட்டத்தில் யானை, சிறுத்தை. கரடி, கழுதைப்புலி, மான்கள், காட்டுபன்றிகள், மயில்கள், முயல்கள் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை வன உயிரினங்கள் வாழ்கின்றன. காடுகளில் போதிய உணவும், தடுப்பணைகளில் தண்ணீரும் இல்லாமல் வறண்டு கிடப்பதால், காட்டில் வாழும் உயிரினங்கள் தவித்து வருவதாக வனத்துறையினரே தெரிவிக்கின்றனர்.

தண்ணீர் தேவையை ஓரளவுக்கு சரிகட்ட வன எல்லைகளில் செயற்கையான தண்ணீர் தொட்டிகளை கட்டி இதில் நீர் நிரப்பும் பணியினை வனத்துறையினர் செய்து வருகின்றனர். வனப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள இந்த தண்ணீர் தொட்டிகளை தேடி தற்போது அதிக அளவு வனவிலங்குகள் வந்தபடி உள்ளன. முன்பெல்லாம் மாலை வேளைகளிலும், இரவு நேரங்களிலும்தான் பெருவாரியான வனவிலங்குகள் இந்த தண்ணீர் தொட்டிகளை நோக்கி வரும். இப்போதெல்லாம் பகல் நேரங்களிலேயே ஊரை ஒட்டியுள்ள இந்த தண்ணீர் தொட்டிகளுக்கு வந்து விடுகின்றன. இந்த தொட்டிகளில் நீர் நிரப்பினாலும் ஓரிரு நாட்களில் காலியாகி விடுகிறது. இந்த வறட்சி காலத்தில் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி மான்கள், காட்டுபன்றிகள், முயல்கள் உள்ளிட்ட வன உயிரினங்கள் காட்டை விட்டு வெளியேறி ஊருக்குள் புகுந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில சமூக விரோதிகள் வனவிலங்குளை வேட்டையாடி இறைச்சிக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

குறிப்பாக தமிழகம்- ஆந்திரா எல்லையில் காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் வனத்துறை சார்பில் வைக்கப்படும் தண்ணீர் தொட்டிகள் பெரும்பாலும் சாலையோரத்திலேயே அமைத்து தண்ணீர் நிரப்பி கணக்கு காண்பித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டி இல்லை. இதனால் அடர்ந்த வனப்பகுதியில் இருந்து தண்ணீரை தேடி வரும் விலங்குகள், சாலை விபத்தில் சிக்கி இறந்து விடுகின்றது. தற்போதுள்ள சூழலுக்கு காடுகளில் தண்ணீர் தொட்டிகள் போதுமானதாக இல்லை. கூடுதல் நிதிஒதுக்கி காட்டு உயிர்களை காக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வனங்களுக்குள் கூடுதல் தண்ணீர் தொட்டிகளை நிரப்பி அடிக்கடி நீர் நிரப்ப வசதி செய்திட வேண்டும். இல்லையெனில் வரும் மாதங்களில் கோடை காலத்தில் மேலும் தண்ணீர் பிரச்னை அதிகளவில் ஏற்படும் சூழ்நிலை உருவாகும்.

தண்ணீர் தொட்டிகள் வைப்பதைஉறுதி படுத்த வேண்டும்
 காட்டுத் தீ பரவாமல் தடுக்க தீத்தடுப்பு பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்று வனத்துறை உத்தரவிடப்பட்டுள்ளது. வனப்பகுதியில் குறிப்பிட்ட அகலத்தில், சில கி.மீ. தூரத்துக்கு காய்ந்த முள்புதர்களையும், சருகுகளையும் அகற்றி மண்ணைக் கிளறிவிட்டு பாதைபோல் ஏற்படுத்துவதே இந்த தீத்தடுப்பு பாதையாகும். இதன் மூலம் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரிந்தாலும் மற்றொரு பகுதிக்கு தீ பரவுவதை எளிதில் தடுத்துவிட முடியும்.  இந்த பாதையை அமைக்க ஆண்டுதோறும் அரசு நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த ஆண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் இப்பணிகள் முறையாக மேற்கொள்ளப்படுகிறதா? என்பது சந்தேகம்தான். அப்படி பணிகள் நடைபெற்றால் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். அதேபோல் காடுகளில் தண்ணீர் தொட்டிகள் வைப்பதையும் துறை சார்ந்த அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டும்.

காடுகளில் தீ வைப்பதால் பலியாகும் உயிரினங்கள்
வேலூர், திருப்பத்தூர் மாவட்டத்தில் கோடைக்காலம் தொடங்கும் முன்பே வனப்பகுதிகள் தீப்பிடித்து எரிவது வழக்கமாக உள்ளது. இதனால் கோடை முழுவதும் வனவளம் பாழ்படுவதோடு, வனவிலங்குகளும் பெருமளவில் அழிந்து வருகின்றன. சில நேரங்களில் சமூக விரோதிகளும் இந்த காட்டுத் தீ பரவுவதற்கு காரணமாக உள்ளனர். இருப்பினும் காட்டுத் தீயை அணைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், தண்ணீர் தட்டுப்பாடு, மலைப் பகுதியில் இரவெல்லாம் எரியும் தீயைக் கட்டுப்படுத்த போதுமான தற்காப்பு உபகரணங்கள் இல்லாமை, தீயணைப்பு வாகனங்களை மலைப் பகுதிகளுக்கு கொண்டுச் செல்ல முடியாமை என்று பல்வேறு காரணங்கள் உள்ளது. பச்சை இலை, தழைகளைக் கொண்டு வனத்துறை பணியாளர்கள் காற்றில் பரவும் தீயை அணைப்பதும், சுற்றுப் பகுதிகளில் குறிப்பிட்ட இடைவெளிக்கு செடி, கொடிகளை அகற்றி அந்த இடத்தை விட்டு தீ பரவாமல் தடுப்பதும் நடைமுறையில் உள்ளது.

Tags : Vellore ,Thiruvannamalai ,Tirupattur ,Ranipet , Vellore, Tiruvannamalai, Tirupattur, Ranipet, barricades lying dry in the forests, wild animals entering the town.
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...