×

திருச்சுழி கிராமங்களில் உள்ள பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருச்சுழி: திருச்சுழி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சுமார் 550க்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு, பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை கண்டறிதல், வகுப்பறைகளில் ஆசிரியர்களின் நடவடிக்கை, பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவியர் செயல்பாடு போன்றவற்றை கண்காணிக்க ஏதுவாக, தனியார் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பள்ளி வளாகத்தில் அன்னியர் நடமாட்டத்தை தவிர்க்க, இது உதவுகிறது. தனியார் பள்ளிகளை போல், அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது குறித்து கல்வித்துறை தரப்பில் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. சில நகராட்சி பள்ளிகளில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால், திருச்சுழி பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்தும் திட்டம், இதுவரை நடைமுறைக்கு வரவில்லை. நகர பகுதிக்குள், ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் படிக்கும் அரசு பள்ளிகள், நகராட்சி பள்ளிகளில், கேமரா பொருத்துவது மிக அவசியம். மாணவர்கள் இடையே ஏற்படும் கோஷ்டி மோதல், பள்ளி வளாகங்களில் மாணவர்களின் நடவடிக்கை, பள்ளிக்குள் புகும் சமூக விரோதிகள் என, பலவிதங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்துவது, கல்வித்துறைக்கு பயன் தருவதாக அமையும்.

தேர்வு மையங்களாக உள்ள பள்ளிகளில், எவ்வித முறைகேடும் நடக்காமல் தடுக்கவும், கண்காணிப்பு கேமரா, பள்ளிகளில் இருப்பது அவசியமாகிறது. மேலும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாகவோ, முன்னாள் மாணவர் அமைப்பு மூலமாகவோ, கேமரா பொருத்தும் திட்டத்தை செயல்படுத்த, கல்வித்துறை முன்வர வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். அரசுப்பள்ளிகளில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில், கண்காணிப்பு கேமரா பொருத்த, தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் சீனிவாசகன் கூறுகையில், பள்ளி பாதுகாப்பிற்கு, வாட்ச்மேன் பணியிடங்கள் பெரும்பாலும் காலியாக உள்ளது. தவிர, பள்ளியில் திருட்டு உள்ளிட்ட குற்றச்செயல்களைக் கண்டறிந்து தடுக்க, கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படவில்லை. இதனால், பள்ளிகளில் தவறுகளை தடுப்பதற்கும், மாணவ, மாணவியர் பாதுகாப்பை கருதி, கண்காணிப்பு கேமரா பொருத்த பொருத்த வேண்டும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சுழி ஒன்றிய செயலாளர் செல்வம் கூறுகையில், தமிழகத்தில் தற்பொழுது பள்ளியில் நடக்கும் சமூகவிரோத சம்பவம் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு நிகழும் பாலியல் தொந்தரவுகளை கண்காணிக்க சிசிடிவி கேமராக்கள் பயன்படும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் கொண்டுவர அரசு மேற்கொள்ள வேண்டும். திருச்சுழி பகுதியில் பெரும்பாலன பள்ளிகள் ஊரிலிருந்து குறைந்தது சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதால் பாதுகாப்பற்ற சுழல் உருவாகிறது. அவ்வாறு இருக்கும் பள்ளியில் இரவு நேர காவலர்கள் இல்லாததால் திருட்டு சம்பவங்களும் அரங்கேறுகின்றன. பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவியர் அச்சத்துடன் செல்கின்றனர்.

இருப்பினும் தமிழ்பாடியில் உள்ள அரசு பள்ளியில் மாணவர்கள் நலன் கருதி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து, தங்களது சொந்த செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளனர். நான்கு கேமராக்கள் பொருத்திய நிலையில் இதில் இரண்டு கேமராக்கள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன. இதுகுறித்து திருச்சுழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை யாரென்று கண்டுபிடிக்கவில்லை. மீண்டும் ஆசிரியர்கள் செலவில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதே போன்று பிற அரசுப்பள்ளிகளிலுள்ள, ஆய்வுக் கூடங்கள், தலைமையாசிரியர் அறை உள்ளிட்ட இடங்களில் கேமரா பொருத்த வேண்டும். இதில் பதிவாகும் காட்சிகளை கண்காணிப்பதற்கும் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளி வளாகங்களிலும் சிசிடிவி கேமராக்களை பொருத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Thiruchuzhi , Thiruchuzhi, CCTV cameras in schools, social activists demand
× RELATED லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி