×

பெட்ரோல் குண்டுவீச்சில் காயமடைந்த டாஸ்மாக் விற்பனையாளர் பரிதாப பலி

காரைக்குடி: காரைக்குடி அருகே டாஸ்மாக் கடையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்த விற்பனையாளர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பள்ளத்தூரில் உள்ள டாஸ்மாக் கடையில் கடந்த 2ம் இரவு 9.50 மணியளவில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் கடையில் பணியில் இருந்த விற்பனையாளர் அர்ச்சுனன்(45) பலத்த தீக்காயமடைந்தார். காரைக்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதுதொடர்பாக வழக்கு பதிந்த பள்ளத்தூர் போலீசார், குண்டுவீச்சில் தொடர்புடைய ராஜேஷ் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த  அர்ச்சுனன், சிகிச்சை பலனின்றி நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த அர்ச்சுனனுக்கு மனைவி, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதனையடுத்து கொலை வழக்காக பதிவு செய்து பள்ளத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

*அர்ஜுனன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பெட்ரோல் பாட்டில் வீச்சு சம்பவத்தில் டாஸ்மாக் நிறுவன பணியாளர் அர்ஜுனன் (வயது 46) தீக்காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இச்சம்பவம் நடைபெற்றவுடன் டாஸ்மாக் நிறுவனம், உடனடியாக 3 லட்சம் ரூபாயினை நிதியுதவியாக அர்ஜுனன் குடும்பத்துக்கு வழங்கி, அனைத்து மருத்துவ செலவுகளையும் ஏற்று அவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என்ற துயரச் செய்தியைக் கேட்டு மிகவும் வேதனையுற்றேன்‌. அர்ஜுனனை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கவும், கருணை அடிப்படையில் அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடையவரை காவல் துறையினர் கைது செய்து, உரிய மேல்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tasmac , Tasmac salesman who was injured in the petrol bombing is a tragic victim
× RELATED காலி மதுபாட்டில்களை திரும்பப் பெறும்...