ராமநாதபுரம்: பரமக்குடி பள்ளி மாணவி பாலியல் பலாத்காரம் வழக்கில் கைதான அதிமுக கவுன்சிலர் உட்பட 5 பேரையும் சிபிசிஐடி காவலில் விசாரிக்க ராமநாதபுரம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் 9ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பரமக்குடியை சேர்ந்த நகராட்சி 3வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிகாமணி (44), மறத்தமிழர் சேனை அமைப்பின் நிறுவனர் புதுமலர் பிரபாகரன் (42), ஜவுளிக்கடை உரிமையாளர் ராஜா முகம்மது (34), பரமக்குடி புதுநகரைச் சேர்ந்த கயல்விழி (45), உமா (34) ஆகிய 5 பேர் போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
பின்னர், 5 பேரும் ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிகாமணி உள்ளிட்ட 3 பேர் ராமநாதபுரம் சிறையிலும், கயல்விழி மற்றும் உமா ஆகியோர் பரமக்குடி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த விவகாரத்தில் மாஜி அமைச்சர் ஒருவரின் உறவினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்து உள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இந்த வழக்கை கடந்த 9ம் தேதி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் செய்து டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து, 2 நாட்களுக்கு முன்பு சிவகங்கை சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கீதா விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். நேற்று சிகாமணி உள்ளிட்ட 5 பேரையும், ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில், சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது, 5 பேரையும் 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் கோரினர். அதனடிப்படையில் விரைவு மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், 5 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
