எடப்பாடி படத்தை எரித்த பாஜ நிர்வாகி பொறுப்பு பறிப்பு

சென்னை: பாஜ தொழில்நுட்ப பிரிவு மாநிலத் தலைவராக இருந்த நிர்மல்குமார், மாநில செயலாளர் திலீப்கண்ணன் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி, எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இதனால், எடப்பாடியை கண்டித்து பாஜவினர் போராட்டம் நடத்தி அவரது உருவபடத்தை எரித்தனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி இனாம்மணியாச்சி பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் இளைஞரணி நிர்வாகிகள், எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ தலைவர் வெங்கடேசன் சென்னகேசவன் விடுத்துள்ள அறிக்கை: மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு பாஜனதா கட்சியின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணாக செயல்பட்டதாலும்,  கட்சியின் நிலைப்பாட்டை மீறி தன்னிச்சையாக செயல்பட்டதாலும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட பாஜ இளைஞர் அணி மாவட்ட தலைவர் தினேஷ் ரோடி தற்போது வகித்து வரும் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் 6 மாத காலம் விலக்கி  வைக்கப்படுகிறார். இவ்வாறு கூறப்பபட்டுள்ளது.

Related Stories: