சென்னை: ‘பெண்களுக்கான திட்டங்களை முதல்வர் அதிக அளவில் செயல்படுத்துகிறார்’ என்று நடிகர் நாசர் தெரிவித்தார். சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் முதல்வரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், ‘ஜனநாயக வலிமை தமிழ்நாட்டின் தலைமை’ என்ற எழுத்தியல் அரங்கம் நேற்று முன்தினம் நடந்தது. இதை நடிகர் நாசர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் நடிகர் நாசர் பேசும்போது, ‘‘சேகர்பாபு இருக்கும் இடத்தில் சிரிப்பும், புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் உள்ளது. யாராவது எழுதி கொடுத்தால் அதை படித்து வசனமாக பேசுபவன் நான். எழுதுபவன் அல்ல. ஆனால், இந்த மேடையில் உள்ளவர்கள் எழுத்தாகவே, பேனாவாகவே உள்ளனர். நான் அரசியல் சார்ந்தவன் அல்ல. அரசியலை உற்று நோக்குபவன். கலைஞர் எழுதிய 4 படங்களில் நான் நடித்துள்ளேன். அவரைப் பற்றி பேசும்போதுகூட என் கண்கள் கலங்குகிறது. கலைஞரின் மகன் என்பது பாக்கியம் இல்லை, அது முதல்வவருக்கு கிடைத்த பொறுப்பு.
இந்த சுமையோடு அவர் பிரமாதமாக ஆட்சி செய்து வருகிறார். 3,000 பேர் உள்ள தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருக்கவே எனக்கு தலை சுற்றுகிறது. ஆனால், 7 கோடி மக்களின் தலைவராக அவர் உள்ளார். என்னுடைய சங்கத்தை, முதல்வர் என்னைவிட ஆழமாக அறிந்துள்ளார். எனவே தமிழகத்தை அவர் எந்த அளவுக்கு ஆழமாக அறிந்திருப்பார் பாருங்கள். பெண்களுக்கான திட்டங்களை முதல்வர் அதிகளவில் செயல்படுத்தி வருகிறார். இது வரவேற்கத்தக்கது என்றார். நிகழ்ச்சியில் எழும்பூர் எம்எல்ஏ பரந்தாமன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
