ரிப்பன் மாளிகையில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு தனி அறை ஒதுக்க வேண்டும்: மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் வலியுறுத்தல்

சென்னை: சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு, ரிப்பன் மாளிகையில் தனி அறை ஒதுக்கி தர வேண்டும் என்று மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் வலியுறுத்தியுள்ளார். சென்னை மாநகராட்சி காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம், சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடந்தது. மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் தலைமை வகித்தார். கூட்டத்தில், சிவ ராஜசேகரன், தீர்த்தி, சுரேஷ்பாபு, அமிர்த வர்ஷினி, தனபாக்கியம், சுபஸ்ரீ உள்ளிட்ட காங்கிரஸ் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், 8 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அப்போது, சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தங்கள் வார்டு பிரச்னைகளை எப்படி விவாதிப்பது என்பது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. சென்னை மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகளையும், தங்கள் பணிகளையும் எங்களுக்குள்ளே பரிமாறிக் கொள்வதற்கும், சில கருத்துகளை வெளிப்படையாக பகிர முடியாது என்பதால், ரிப்பன் மாளிகையில் நாங்கள் கலந்தாலோசனை செய்வதற்காக ஒரு அறையை ஒதுக்கி தரும்படி மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்பதற்காகவும் ஒரு தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

எங்களை பொறுத்தவரை சென்னை மாநகராட்சி என்பது ஒரு சீரும், சிறப்புமாக நடந்து கொண்டிருக்கிற மாநகராட்சி. கடந்த  மழையின் போது மாநகராட்சி பகுதிகளில் ஒரு சொட்டு தண்ணீர் கூட தேங்காத அளவுக்கு இந்த ஓராண்டு காலத்தில் சிறப்பாக பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. கவுன்சிலர்களுக்கும், அதிகாரிகளுக்கும் சில சில இடங்களில் கண்டிப்பாக பிரச்னை இருக்கத்தான் செய்கிறது. அந்த பிரச்னை பெரிய அளவில் இல்லை. சுமுகமாக தீர்த்துக்கொள்கிறோம்.

ஏனென்றால், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு மக்களை ஏமாற்றி சென்னை மாநகராட்சியில் எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. இதனால் சென்னை மாநகராட்சி ஒரு இருண்ட மாநகராட்சியாக தான் இருந்தது. ஆனால் இந்த ஓராண்டு காலத்தில் சென்னை மாநகராட்சி பல சாதனைகளை செய்துள்ளது.  காங்கிரஸ் கவுன்சிலர்களின் பணிகளை யார் தடுத்தாலும் நாங்கள் அந்த கட்சியின் தலைவர்களிடம் எடுத்து சென்று அதை முறையிட்டு தீர்வு காண்போம். எந்த கட்சியையும் நான் குறிப்பிட்டு சொல்லவில்லை. இப்போதைக்கு எந்த பிரச்னையும் இல்லை. எழுந்தால் அப்படி செய்வேன் என்று தான் சொல்கிறேன். நாங்கள் எந்த பணிகளை கேட்டாலும் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கூட நிதி ஒதுக்குகிறார்கள்.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: