மாதவரத்தில் ரூ. 7 லட்சத்தில் காரியமேடை அமைக்கும் பணி தொடக்கம்

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம், 25வது வார்டு தட்டாங்குளம் சாலை, பஜார் தெரு, சாமிநகர், சீதாபதி நகர், எஸ்.எம்.பி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ளவர்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு காரியம் செய்வதற்கு இடமில்லை. எனவே குளக்கரையிலும், திறந்தவெளியிலும் சடங்குகள் செய்ய வேண்டியுள்ளது. இதையடுத்து தங்களுக்கு காரியமேடை அமைத்து தரவேண்டும் என்று, சென்னை வடகிழக்கு திமுக மாவட்டச் செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்.எல்.ஏ.விடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ரூ. 7 லட்சம் செலவில் சாமிநகரில் கழிப்பிடம், குடிநீர் வசதிகளுடன் கூடிய காரியமேடை மாநகராட்சி சார்பில் அமைக்க திட்டமிடப்பட்டு, இதற்கான பணியை மண்டலக்குழு தலைவர் நந்தகோபால் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி ஆணையர் முருகன், செயற்பொறியாளர் சின்னதுரை, உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: