×

ஆரூத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ், எல்பின் நிதி நிறுவனங்களின் 1,115 வங்கி கணக்குகள் முடக்கம்: ரூ.13,700 கோடி மோசடி செய்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை

சென்னை: தமிழகம் முழுவதும் அதிக வட்டி தருவதாக, 2.84 லட்சம் பேரிடம் ரூ.13,700 கோடி மோசடி செய்த ஆரூத்ரா, ஐஎப்எஸ், ஹிஜாவ், எல்பின் ஆகிய நிதி நிறுவனங்களில் 1,115 வங்கி கணக்குகளை முடக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், முதலீடு செய்த அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க எற்பாடு செய்யப்படும் என பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்துள்ளார். சென்னையில் செயல்பட்டு வந்த ஆரூத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட், எல்என்எஸ் இன்டர்நேஷ்னல் பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் ஹிஜாவ் ஆசோசியேட் பிரைவேட் லிமிடெட், திருச்சியை சேர்ந்த எல்பின் லிமிடெட் நிறுவனங்கள், பொதுமக்கள் ஒரு லட்சம் டெபாசிட் செய்தால், 10 முதல் 30% வரை வட்டி தருவதாக, தமிழ்நாடு முழுவதும் 2.84 லட்சம் பேரிடம் ரூ.13,700 கோடி பணம் பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள், பொருளாதார குற்றப்பிரிவில்  அளித்த புகாரின் படி இந்த 4 நிதி நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டும், சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள், மோசடி தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: சென்னையில் இயங்கி வந்த ஆரூத்ரா நிதி நிறுவனம், தங்கள் நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் 30% வட்டி தருவதாக கூறி 1 லட்சம் பேரிடம் சுமார் ரூ.2,438 கோடி வரை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுதொடர்பாக ஆரூத்ரா நிறுவன இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில்குமார், நாகராஜ் மற்றும் மேலாளர்கள் பேச்சிமுத்து ராஜா, அய்யப்பன், ஏஜென்ட் ரூசோ என 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலான் இயக்குநர் ராஜசேகர், அவரது மனைவி உஷா, மைக்கேல் ராஜ் ஆகிய 3 பேர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றுவிட்டனர். அவர்களை பிடிக்க ‘ரெட் கார்னர் நோட்டீஸ்’ வழங்கப்பட்டுள்ளது.

ஆரூத்ரா மீதான வழக்கில், இதுவரை ரூ.5.69 கோடி ரொக்கம், ரூ.1.13 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நிதி நிறுவன இயக்குநர்கள், ஏஜென்ட்களின் 120க்கும் மேற்பட்ட வங்கி கணக்கில் இருந்த ரூ.96 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 97 அசையா சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக கொண்டு இயங்கிய  ‘ஹிஜாவ்’  நிதி நிறுவனம், அதன் 18 துணை நிறுவனங்கள் மூலம் 15 சதவீதம் வட்டி தருவதாக 89 ஆயிரம் பேரிடம் சுமார் 4,400 கோடி ரூபாய் வரை டெபாசிட் பெற்று மோசடி செய்துள்ளனர். இந்த வழக்கில் நிதி நிறுவன மேலாண் இயக்குநர் உள்பட 52 பேர் எதிரிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் நேரு, குருமணிகண்டன், முகம்மது ஷெரிப், சாந்தி பாலமுருகன் என 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இயக்குநர்களான சவுந்தரராஜன், சுரேஷ் செல்வம் ஆகியோர் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலான் இயக்குநர் அலெக்சாண்டர், அவரது மனைவி இயக்குநர் மகாலட்சுமிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. ஹிஜாவ் நிறுவனத்தில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 448 கிராம் தங்கம், ரூ.75 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ வெள்ளி ரூ.3.34 கோடி ரொக்கம், 80 லட்சத்திலான 8 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், 120 வங்கி கணக்குகளில் உள்ள ரூ.14.47 கோடி முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 45 கோடி சொத்துக்களை முடக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், ‘ஐஎப்எஸ்’ நிதி நிறுவனம், மாதம் 10 சதவீதம் வட்டி தருவதாக 84 ஆயிரம் பேரிடம் சுமார் 5,900 கோடி ரூபாய் பணம் பெற்று திருப்பி தராமல் மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் 10 இயக்குநர்கள் உள்பட  19 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4 இயக்குநர்களுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.1.12 கோடி ரொக்கம், ரூ.34 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிறுவனத்தின் 791 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.121.54 கோடி பணம் முடக்கப்பட்டுள்ளது. ரூ.12.23 கோடி மதிப்புள்ள அசையா சொத்துக்கள்  பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கில் கடந்த நம்பவர் மாதம் 8ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘எல்பின்’ நிறுவனத்தில் 11 ஆயிரம் பேரிடம் ரூ.926 கோடி முதலீடு பெற்று ஏமற்றியுள்ளனர். இந்த மோசடி தொடர்பாக, 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.  மோசடி குறித்து விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனர். இயக்குநர்கள் மற்றும் ஏஜெண்டு வீடுகளில் நடந்த சோதனையில் 400 கிராம் தங்கம், 5 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த நிறுவனத்தின் 42 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. ரூ.139 கோடி மதிப்புள்ள 257 அசையா சொத்துக்கள் கண்டறிந்து பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான ராஜா(எ)அழகர்சாமி, ரமேஷ்குமார், ஆனந்த பத்மநாபன் கைது ெசய்யப்பட்டுள்ளனர். அனைத்து வழக்குகளும் 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் கூறுகையில், இந்த 4 நிதி நிறுவனங்களின் இயக்குநர்கள் உள்ளிட்ட குற்றவாளிகளை பிடிக்க டிஜிபி எங்களுக்கு கூடுதலாக 21 உதவி ஆய்வாளர்களை அளித்துள்ளார். அவர்கள் மூலம் தற்போது தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம்.

வெளிநாடுகளில் பதுங்கி உள்ள இயக்குநர்களை சர்வதேச போலீசார் உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்த அனைத்து பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம்  மற்றும் டிஆர்ஓ மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை. இவ்வாறு ஐஜி ஆசியம்மாள் தெரிவித்தார். இந்த 4 மோசடி நிறுவனங்களில் முதலீடு செய்த அனைத்து
பொதுமக்களுக்கு நிவாரணம் கிடைக்க நீதிமன்றம்  மற்றும் டிஆர்ஓ மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் பயப்பட தேவையில்லை.


Tags : Arutra ,IFS ,Hijau ,Elpin , Freezing of 1,115 bank accounts of Arutra, IFS, Hijau, Elbin financial institutions: Action taken in case of Rs 13,700 crore fraud
× RELATED ஆரூத்ரா மோசடி வழக்கில் கைது...