சென்னையில் விரைவில் நடைமுறைக்கு வருகிறது அதிவேகமாக வாகனம் ஓட்டினால் தானியங்கி கேமரா மூலம் வழக்கு: 4 திட்டங்களை தொடங்கி வைத்து போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தகவல்

சென்னை: சென்னை மாநகர காவல்துறை சார்பில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் ரூ.4.22 கோடி செலவில் 6 வேகம் காட்சி பலகைகள், 45 பல்நோக்கு செய்தி பலகைகள், 139 எல்இடி பொருத்தப்பட்ட போக்குவரத்து நிழற்குடைகள் மற்றும் 170 ரிமோட் கன்ட்ரோல் சிக்னல்கள் என 4 நவீன தொழில்நுட்பங்கள் அடங்கிய சாதனங்கள் நேற்று தொடங்கப்பட்டன. சென்னை அண்ணாசாலை ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் 4 புதிய திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது, போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கபில் குமார் சரத்கர், போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனம், துணை கமிஷனர் சமய்சிங் மீனா உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியதாவது: சென்னை மாநகர காவல்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டு வருகிறது. ஸ்பென்சர் சிக்னல் சந்திப்பில் ரிமோட் மூலம் இயக்கும் சிக்னல் தொடங்கப்பட்டுள்ளது. சாலையில் திடீரென ஆம்புலன்ஸ் வரும் போதும், நெரிசல் நேரங்களில் சிக்னல் மாற்ற வேண்டும் என்றால் போக்குவரத்து போலீஸ் சிக்னல் அருகே இருக்க வேண்டும். இதனால் சில சிரமங்கள் இருந்தது. ஆனால் தற்போது போக்குவரத்து போலீசார் ரிமோட் மூலம் சிக்னல் மாற்றி வழியை ஏற்படுத்த முடியும். அதன்படி ரூ.27 லட்சம் செலவில் 170 சந்திப்புகளில் ரிமோட் கன்ட்ரோல் முறை சிக்னல் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதவிர வாகனங்கள் செல்லும் வேகத்தை அளவிடும் கருவியின் திரை 6 வைத்து இருக்கிறோம். வரும் காலத்தில் கூடுதலாக 30 ஏஎன்பிஆர் வைத்துவிட்டு அதை திரையில் இணைத்து அதிக வேகத்துடன் செல்லும் வாகனங்கள் மீது தானியங்கி மூலம் இ-சலான் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட உள்ளது. கோடை காலம் தொடங்கியுள்ளதால் ரூ.36.54 லட்சம் செலவில் போக்குவரத்து போலீசாருக்கு ஒரு நாளைக்கு இரண்டு வேலை மோர் வழங்கப்படும். வரும் காலத்தில் அதிக திட்டங்கள் வர உள்ளது. போக்குவரத்து ெநரிசலை கண்காணிக்க டிரோன் வரப்போகிறது. ஐவிஆர்எம் வரப்போகிறது. திருட்டு வாகனங்களை எளிமையாக கண்டுபிடிக்க புதிய திட்டங்கள் வரப்போகிறது.

* வேக கட்டுப்பாடு இடங்கள்

அண்ணா சாலை-ஸ்பென்சர் சிக்னல்

காமராஜர் சாலை-  உயர் கல்விக்கான தமிழ்நாடு மாநில கவுன்சில் அருகே

ஈ.வி.ஆர்.சாலை-கீழ்ப்பாக்கம் சிக்னல்

கிழக்கு கடற்கரை சாலை-விஜிபி அருகே

100 அடி சாலை- செக்டர் 10 மற்றும் செக்டர் 13 அசோக் நகர்

ஓஎம்ஆர் சாலை-அமெரிக்கன் பள்ளி எதிரே தரமணி

Related Stories: