×

புதிய வகை வைரஸ் பரவல் எதிரொலி வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு: தொடர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் பரிசோதனை கட்டாயம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு, கொரோனா தொற்றை முழுக்க முழுக்க கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. அதற்கு உதாரணமாக, மாநிலத்தில் தினசரி பதிவாகும் கொரோனோ தொற்றால் பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டை இலக்கை தாண்டவில்லை. மேலும், தமிழகத்தில் சுகாதார கட்டமைப்பு தயாராக இருப்பதால், எவ்விதமான நோய் தொற்று வந்தாலும், அவற்றை தமிழக அரசின் மருத்துவ துறை சமாளிக்கும் வகையில் தேவையான மருந்து, மாத்திரைகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் பலமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட சுகாதார துணை இயக்குனர்களுக்கு பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ  விநாயகம் அனுப்பியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிட்டப்பட்டுள்ளது. ஒன்றிய  சுகாதாரத்துறை வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை  மேற்கொள்ளுமாறு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அந்த வகையில் இந்த வகை வைரஸ் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் 7 நாட்கள் வீட்டு  தனிமையில் இருக்க வேண்டும். பொது இடங்களுக்கு செல்வதையும்,  குடும்பத்தினரிடம் நெருக்கமாக இருப்பதையும் தவிர்க்க வேண்டும். இருமல் நீர்த்துளிகள் காற்றில் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணிவது நல்லது. மூச்சுவிடுவதில் சிரமம் இருந்தால்  மட்டும். இன்புளூயன்சாவுக்கான ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்ய வேண்டும். காய்ச்சல் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி மருந்து எடுக்க வேண்டும். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும்.

முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் எவ்வாறு வழிகாட்டு நெறிமுறைகள்: 3 அடுக்கு முகக்கவசம் அணிவது நல்லது. மருத்துவமனையில் இருப்பவர்களும், மருத்துவ ஊழியர்களும் அத்தகைய முகக்கவசத்தை பயன்படுத்த வேண்டும். சுகாதார  பணியாளர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடுவோர் மற்றும் பொதுமக்கள் இவ்வகை முகக்கவசத்தை அணிய வேண்டும். மருத்துவ பணியில் ஈடுபடும் அனைவரும் இன்புளூயன்சா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். பரிசோதனை  கூடங்களில் பணிபுரிவோர், மருத்துவம் சாரா பணியாளர்கள் பாதுகாப்பாக கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

காய்ச்சல் பாதிப்பு 4 வகைகளாக பிரிப்பு: லேசான காய்ச்சல், இருமல் பாதிப்பு கொண்டவர்கள் ஏ வகை, தீவிர காய்ச்சல், அதிக இருமல் கொண்டவர்கள் பி வகை, தீவிர காய்ச்சல் உள்ள குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர், இணைநோய் இருப்போர் என 2 வகைகளில் இருப்பவர்களுக்கு இன்புளூயன்சாவுக்கான பரிசோதனையோ, மருத்துவமனை அனுமதியோ தேவையில்லை. இவர்கள் வீட்டுத்தனிமையில் இருந்தால் போதுமானது. சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தொடர் காய்ச்சல், உணவு உண்ணாமை, மூச்சு விடுவதில் சிரமம் இருந்தால் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம் செய்ய வேண்டும்.  

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். வீட்டு தனிமையில் இருப்பவர்கள் 24 மணி நேரமும் 104 மற்றும் 108 ஆகிய 2 எண்களை தொடர்பு கொண்டு இன்புளூயன்சா காய்ச்சல் தொடர்பான சந்தேகங்களுக்கு மருத்துவ ஆலோசனை பெறலாம். மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் பணி புரிவோர், ஆய்வகங்களில் பணி புரிவோர் கட்டாயம் என்95 முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மருத்துவமனை ஊழியர்கள் அனைவரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் இணை நோய் உள்ளோரும் ப்ளூ காய்ச்சல் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம். 65 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள், 8 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்வது நல்லது.

கோடைக்காலம் வர உள்ளதால் வெப்ப அலை பருவ நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் முன்எச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள சுகாதாரத்துறை அனைத்து மாவட்ட துணை இயக்குனர்களுக்கு  அறிவுறுத்தப்பட்டள்ளது. வெப்ப அலை தாக்கத்தால் குழந்தைகள், சிறுவர்கள் அதிகம் பாதிக்கப்படக்கூடும் என்பதால் மருத்துவ கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். உடல் வெப்பம் தொடர்பான நோய் பாதிப்பு இந்த பருவகாலத்தில்  ஏற்படக்கூடும் என்பதால் நீர் சத்து உள்ள உணவுகள், பழங்களை அதிகம் சேர்க்கவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க குடை, தொப்பி  போன்றவற்றை பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. காய்ச்சலுக்காக  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அறிகுறிகள் இல்லையென்றால் 7 நாட்களுக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். மேலும் 14 நாட்களுக்கு பிறகே குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்படும்.

* சி வகை பாதிப்பான தீவிர காய்ச்சல், தொண்டை வலி, மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சு வலி, ரத்த அழுத்த குறைவு இருந்தால் மட்டும் இன்புளூயன்சா வைரசுக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் பணிபுரிவோர் என்95 முகக்கவசம் அணிய வேண்டும். மற்றவர்கள் 3 அடுக்கு முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.

Tags : Tamil Nadu Government , Issue of New Virus Spread Echo Guidelines: Persistent Fever, Difficulty Breathing Compulsory Testing; Tamil Nadu Government Notification
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்