உத்தவ் ஆட்சி கவிழ்ந்த விவகாரம் கவர்னர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு

புதுடெல்லி: உத்தவ் தாக்கரே ஆட்சி கவிழ்ந்த விவகாரத்தில் கவர்னர் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் எதிர்ப்புதெரிவித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக 34 எம்எல்ஏக்கள் அப்போது முதல்வராக இருந்த உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பினார்கள். இதனால் அப்போதைய கவர்னர் கோஷியாரி  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். இதையடுத்து உத்தவ் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் தலைவராக இருந்த ஏக்நாத் ஷிண்டே நியமிக்கப்பட்டார். இந்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கவர்னர் தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா 2022ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த அரசியல் குழப்பத்தையும், அதை தொடர்ந்து கவர்னர் எடுத்த நடவடிக்கைகளையும் விளக்கி கூறினார். இதை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. இதுபற்றி நீதிபதிகள் கூறும்போது,’ கட்சி கொள்கை, வளர்ச்சி நிதி ஒதுக்குதல் உள்ளிட்டவை தொடர்பாக ஒரு கட்சி எம்எல்ஏக்கள் மத்தியில் மாற்று கருத்து இருக்கலாம். ஆனால் ஒரு அரசு மீது நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த கவர்னர் உத்தரவிடுவதற்கு இதுபோதுமானதாக இருக்க முடியுமா?. ஒரு குறிப்பிட்ட முடிவை எடுக்கும் வகையில் கவர்னர் தனது அலுவலகத்தை பயன்படுத்த முடியாது. ஏனெனில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த உத்தரவிடுவது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்க்கத்தான் உதவும்.   கட்சி தொண்டர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பரவலான அதிருப்தி இருப்பதாக 34 எம்.எல்.ஏ.க்கள் நிறைவேற்றிய தீர்மானம் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுக்க போதுமானதா? இந்த விவகாரத்தில் கவர்னர் நுழைய முடியாது என்பதுதான் உண்மை. மக்கள் தான் ஆளும் கட்சியை தூக்கி எறிவார்கள். ஆனால் கவர்னரால் இங்கு ஆளும் அரசு கவிழ்க்கப்படுவது ஜனநாயகத்திற்கு சோகமான காட்சியாக இருக்கும். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

Related Stories: