தமிழ்நாடு முழுவதும் 60 அரசு அலுவலகங்களில் ரெய்டு: லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி; லட்சக்கணக்கில் பணம் பறிமுதல்

சென்னை: பத்திரப்பதிவு, ஆர்டிஓ அலுவலகங்கள் என மாநிலம் முழுவதும் 12 அரசு துறையின் கீழ் இயங்கும் 60 அரசு அலுவலகங்களில் நேற்று பிற்பகலில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கணக்கில் வராத ரூ.34 லட்சம் ரூபாய் பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  தமிழ்நாடு அரசு துறைகளில் பத்திரப்பதிவுத்துறை, போக்குவரத்து, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், வணிகவரித்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வணிகவரித்துறை, வருவாய்துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், சார்பதிவாளர் அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை, நகர் ஊரமைப்பு இயக்ககம் என 12 அரசு துறைகளில் அதிக அளவில் லஞ்சம் வாங்குவதாக புகார்கள் எழுந்தன.

பொதுவாக தீபாவளி பண்டிகை, புத்தாண்டு, ஆயுதபூஜை நாட்களில் அதிகளவில் பரிசு பொருட்கள், பணம் அன்பளிப்பாக வரும். பண்டிகை மற்றும் விழா காலங்களில் அரசு அலுவலகங்களில் அரசு அதிகாரிகளின் வசூல் வேட்டையை தடுக்க அடிக்கடி லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்வது வழக்கம். கடந்த ஆண்டு கூட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஒரே நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் வட்டாட்சியர், பத்திரப்பதிவு, மாசுகட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் அதிரடி சோதனை நடத்தி பல கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் ஏராளமான பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது, கணக்கில் வராத அதிகளவில் பணம் வைத்திருந்த அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து அதிரடியா கைது செய்தனர்.

ஆனால், தற்போது எந்த பண்டிகைகளும் இல்லாத நிலையில், தமிழ்நாட்டு அரசின் பத்திரப்பதிவு, ஆர்டிஓ, நகராட்சி அலுவலகங்கள் என 12 அரசு துறையின் 60 அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக, பத்திரப்பதிவின் போது அரசு நிர்ணயித்த கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், அதேபோல், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், பிறப்பு இறப்பு சான்றுகள் வழங்கும் அலுவலகங்களில் அதிகளவில் பணம் அதிகாரிகள் மூலம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதைதொடர்ந்து முதல்வர் உத்தரவுப்படி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி மேற்பார்வையில் ஐஜிக்கள் பவானீஸ்வரி, துரைக்குமார் ஆகியோரது தலைமையில் தமிழ்நாடு முழுவதும் 12 அரசு துறைகளின் கீழ் இயங்கும் 60 அரசு அலுவலகங்களில் ‘திடீர் சோதனை’ என்ற பெயரில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அலுவலகத்தில் இருந்தவர்கள் யாரையும் வெளியே விடவில்லை. அதேபோல், அலுவலகத்திற்குள் வெளியாட்கள் உள்ளே விடவில்லை. சோதனையின் போது அதிகாரிகள் செல்பேன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டது. அலுவலகங்களின் வாயில் கதவுகள் சோதனை முடியும் வரை மூடப்பட்டது.

சென்னை அடுத்த நசரத்பேட்டையில் தேசிய நெடுஞ்சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து சோதனை சாவடியில் மைந்துள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் வர்ணிகாஸ்ரீ, எஸ்ஐக்கள் கங்கண்ணன், முகமது பாரூக் ஆகியோர் தலைமையில் நடந்த சோதனையில் சோதனை சாவடி இன்ஸ்பெக்டர் சரோஜா, தற்காலிக ஊழியர்களிடம் இருந்து கணக்கில் வராத ரூ.20 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல், ஆவடி, வில்லிவாக்கம், ராயபுரம், பொன்னேரி சார் பதிவாளர் அலுவலகங்கள், திருவண்ணாமலையில் உள்ள இணை சார்பதிவாளர் அலுவலகங்களில் சோதனை நடந்தது.

கடலூர் மாநகராட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி தேவநாதன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுந்தர்ராஜன், அன்பழகன், திருவேங்கடம் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். திருவண்ணாமலை தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள, இணை சார் பதிவாளர் அலுவலகத்தில் டிஎஸ்பி சரவணகுமார் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி உள்பட 6 பேர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்துக்குள் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த நபர் ஒருவரிடம் வைத்திருந்த சுமார் ரூ.5 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பணத்திற்கான ஆவணங்களை சமர்ப்பித்து பணத்தை மீட்டு கொள்ளுங்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.

செய்யாறு இணை சார் பதிவாளர் அலுவலகம் 2ல் லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் மைதிலி தலைமையில் சோதனை நடந்தது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே அமைந்துள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர் (தணிக்கை) அதிகாரி அறையில் உள்ள மேஜை, ஆவணங்களுக்கு இடையே பதுக்கி வைத்திருந்த கணக்கில் வராத பணம் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டிஎஸ்பி கணேசன் தலைமையில் சோதனை நடந்தது. அதில், அலுவலகத்திற்குள் கணக்கில் வராத பணம் ரூ.2 லட்சத்து 34 ஆயிரத்து 100 பறிமுதல் செய்யப்பட்டது.

தேனி சார் பதிவாளர் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சுந்தர்ராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடந்தது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழியில் சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் தாலுகா அலுவலகத்திலும் விருதுநகர் லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் பூமிநாதன் தலைமையில் சோதனை நடந்தது.மதுரை, திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யசீலன் தலைமையில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டு நில அளவையர் ரகுபதி, உதவியாளர் சகாயராணி, தாசில்தார் பார்த்திபன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு, மதுரை சாலையில் ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஆய்வாளராக பாலசுப்ரமணியன் அறையில் சோதனை நடத்தினர். தூத்துக்குடி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பீட்டர் பால், இன்ஸ்பெக்டர் சுதா தலைமையில் சோதனை நடந்தது. இந்த சோதனையில், அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் தியாகராஜன் என்பவரின் காரில் இருந்து கணக்கில் வராத ரூ.1 லட்சம் பணம், அவரது அறையில் இருந்து ரூ.42 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் சோதனை நடந்தது. அதில் கணக்கில் வாரத ரூ.37 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சிப்காட் பகுதியில் அமைந்துள்ள ஆர்டிஓ சோதனைச்சாவடியில், மாவட்ட லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 4,550 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக புர்ஹாநுதின் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் வட்டார போக்குவரத்து அலுவலர் ரகுபதி, அவரது உதவியாளர் விக்னேஷ்வரன், அலுவலக கண்காணிப்பாளர்கள் மலர்விழி, ராதா ஆகியோர் அறைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஊழியர் வைத்திருந்த ரூ.15 ஆயிரத்தை பறிமுதல் செய்யப்பட்டது.திருப்பூர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தட்சணாமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சசிலேகா தலைமையில் நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.50 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், திருப்பூர் சிறுபூலுவப்பட்டியில் உள்ள வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில் சோதனை நடந்தது. அப்போது கிடைத்த ரகசிய தகவலின் படி, வஞ்சிபாளையம் ரோட்டில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சொந்தமான மைதானத்தில் பணியில் இருந்த மோட்டார் வாகன ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் புரோக்கர்களிடம் சோதனை நடத்திய போது, கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. கோவை துடியலூரில் உள்ள கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நடந்தது. ஈரோடு மாவட்டம் பண்ணாரி வட்டார போக்குவரத்து சோதனைச்சாவடியில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.40 ஆயிரம் சிக்கியது.

குமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி மேற்கு கிராம நிர்வாக அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் மூன்று ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது கிராம நிர்வாக அலுவலர் சித்ரா அறையில் இருந்து கணக்கில் வராத ரூ.17,843 பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக 33 லட்சத்து 75 ஆயிரத்து 773 ரூபாய் கைப்பற்றப்பட்டது. சிவங்கை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1,79 லட்சம் கூகுல் பே மூலம் தனி நபருக்கு பணி பரிவர்த்தனை செய்யப்பட்டது கண்டறியப்பட்டது. கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் மனை பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவது சம்பந்தமான பணிகளை அதிகாரிகள் எதிரே உள்ள நகரமைப்பு அலுவலகத்திற்கு இணையான தனியார் அலுவலகங்கள் இயங்கி வருவது கண்டறியப்பட்டது. தனியார் அலுவலகங்களில் ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: