×

அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி

ஐரோப்பா: அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. உலகின் வல்லரசாக கருதப்படும் அமெரிக்காவின் வங்கித் துறையில் ஏற்பட்டுள்ள சுனாமியால் (வங்கிக்கு நெருக்கடி), கடந்த சில நாட்களுக்கு முன் மிகவும் பழமையான ‘சிலிக்கான் வேலி’ வங்கி மூடப்பட்டது. அதற்கு அடுத்த சில நாட்களில் ‘சிக்னேச்சர்’ வங்கி மூடப்பட்டது. தற்போது ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியும் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஒரு வாரத்தில் மூன்று பெரிய வங்கிகள் அடுத்தடுத்து மூடப்பட்டதால் அந்நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச ெபாருளாதார ஆய்வுகட்டுரைகளை வெளியிடும் ‘ப்ளூம்பெர்க்’ நிறுவனத்தின் கூற்றுப்படி, ரிபப்ளிக் வங்கியின் பங்குகள் 61.83% அளவிற்கு சரிந்துள்ளன. முந்தைய வர்த்தக நாளில், அதன் ஒரு பங்கின் விலை 19 டாலரை எட்டியது. சிலிக்கான் வேலி வங்கிக்கும், சிக்னேச்சர் வங்கிக்கும் ஏற்பட்ட நெருக்கடி மற்றும் வர்த்தக வீழ்ச்சியால் ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கியின் பங்குகள் வீழ்ச்சியடைந்தன. உலகளாவிய மதிப்பீட்டு நிறுவனமான ‘மூடிஸ்’ வெளியிட்ட புள்ளி விபரங்களின்படி, ஆறு அமெரிக்க வங்கிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில் முதல் இடத்தில் ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கி உள்ளது. இது தவிர, ஜியான்ஸ் பான்கார்ப், வெஸ்டர்ன் அலையன்ஸ் பான்கார்ப், கொமெரிகா இன்க், யுஎம்பி பைனான்சியல் கார்ப் மற்றும் இன்ட்ரஸ்ட் ஃபைனான்சியல் கார்ப்பரேஷன் ஆகியனவும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. அமெரிக்க வங்கிகள் ஒன்றன் பின் ஒன்றாக மூடப்பட்டு வருவதால், கடந்த 2008ம் ஆண்டில் ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையை அமெரிக்கா எதிர்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்க வங்கி வரலாற்றில், சிலிக்கான் வேலி வங்கி, ‘சிக்னேச்சர்’ வங்கி, ‘பர்ஸ்ட் ரிபப்ளிக்’ வங்கிகள் அடுத்தடுத்து மூடப்படுவதால், 2008ம் ஆண்டுக்கு பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய இரண்டாவது பெரிய வங்கிகள் மூடல் சம்பவமாகும்.

இதற்கிடையில், அமெரிக்காவில் வங்கித் துறையில் ஏற்பட்ட நெருக்கடியால், மேலும் சில வங்கிகள் மூடப்படலாம் என்று அமெரிக்க மூத்த முதலீட்டாளர் பில் அக்மேன் தெரிவித்துள்ளார். இதற்கிடையே அமெரிக்க நிதித் துறையும், வங்கி ஒழுங்குமுறை அமைப்புகளும் வெளியிட்ட அறிக்கையில், ‘சிலிக்கான் வேலி வங்கி, சிக்னேச்சர் வங்கி ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்துள்ள பணம் முழுமையாக திரும்பக் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் தங்களது பணத்தைக் கையாள வசதியாக தற்காலிகமாக புதிய வங்கி சேவையை அமெரிக்க பெடரல் வைப்பீடு காப்பீடு கார்ப்பரேஷன் உருவாக்கியுள்ளது. சிக்னேச்சர் வங்கி வாடிக்கையாளர்களும், கடன் வாங்கியவர்களும் தாமாகவே புதிய வங்கியின் வாடிக்கையாளர்களாகி விடுவார்கள்’ என்று கூறியுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி முடங்கியதன் விளைவாக ஐரோப்பாவிலும் பல வங்கிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய வங்கிகள் பலவற்றின் பங்குகள் விலை குறைந்ததால் பங்குச்சந்தையிலும் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்தின் கிரெடிட் ஸ்விஸ் வங்கிப் பங்கு விலை 30% வீழ்ச்சி அடைந்துள்ளது. பிரான்சின் சொசைட்டி ஜெனரல் பி.என்.பி. பாரிபாஸ் நிறுவனப் பங்கு விலை 10 சதவீதம் சரிந்துள்ளது. அதேநேரம் அமெரிக்க வங்கிகளின் வீழ்ச்சியை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்க அதிபர் மாளிகையும் அறிக்கை வெளியிட்டுள்ளது.

Tags : America ,Silicon Valley ,Europe , The collapse of America's Silicon Valley bank has caused a crisis for many banks in Europe as well
× RELATED பிளம்ஸ் பழத்தின் நன்மைகள்!