×

காரைக்கால் போலி நகை மோசடியில் தேடப்பட்ட பெண் தொழிலதிபர் விசாகப்பட்டினத்தில் அதிரடி கைது: வெளிநாடு தப்பி செல்ல முயற்சித்தபோது பிடிபட்டார்

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் காரைக்கால், பெரமசாமிபிள்ளை வீதியில் கைலாஷ் என்பவர் நடத்தி வரும் நகைக் கடைக்கு கடந்த 10ம்தேதி காரைக்கால் சின்னக்கண்ணு செட்டி வீதியைச் சேர்ந்த பரசுராமன் (30) என்பவர் 12 பவுன் கவரிங் நகையை விற்க முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார். அவரை காரைக்கால் டவுன் போலீசார் கைது செய்து விசாரித்தபோது, போலி நகை மோசடிக்கு உடந்தையாக இருந்த கொல்லபுரம் ரிபாத் காமில் (35), புதுச்சேரி காவல்துறையில் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட எஸ்ஐ ஜெரோம் (38), காரைக்கால் ரமேஷ் (32), பூத்துறை முகமது மைதீன் (38) உள்ளிட்ட 5 பேரை கைது அடுத்தடுத்து கைது செய்தனர்.

இவர்கள் கூட்டாக சேர்ந்து காரைக்கால் மட்டுமின்றி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் அரசு மற்றும் அரசு சார்ந்த வங்கிகள், தனியார் நிதி நிறுவனங்கள், நகைக்கடைகள், அடகுகடைகளில் தங்க முலாம் பூசப்பட்ட கவரிங் நகைகளை அடமானம் வைத்து கோடிக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது. இதனிடையே போலி நகையை காரைக்காலில் உள்ள 2 தனியார் நிறுவனங்களில் அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்டதாக அங்குள்ள காமராஜர் நகரில் வசிக்கும் தேவதாஸ் (38) என்பவர் மீது வழக்குபதிந்த போலீசார் நேற்று அவரை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின்பேரில் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக சிதம்பரம் சிவக்குமார் (45), மூலப்பொருட்கள் சப்ளை செய்த கடலூர் சோழன் (52) ஆகியோரும் பிடிபட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய காரைக்கால் காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தது. இந்த நிலையில் இவ்வழக்கின் முக்கிய புள்ளியான புவனேஸ்வரி தொடர்ந்து தலைமறைவாக இருந்தார். அவரது இருப்பிடம் தேடி தனிப்படை செல்லும் இடங்களில் இருந்து டிமிக்கி கொடுத்து தப்பிஓடிவந்த நிலையில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் அவர் தங்கியிருப்பதாக தனிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனியர் எஸ்பி லோகேஷ்வரன் உத்தரவின்பேரில் அங்கு விரைந்த தனிப்படையினர் நேற்று நள்ளிரவு அந்த விடுதியை சுற்றிவளைத்தனர். பின்னர் அங்கிருந்த புவனேஸ்வரியை மகளிர் போலீசாரின் உதவியுடன் மடக்கிப்பிடித்தனர்.

பின்னர் அவரை கைது செய்து விசாரித்தபோது மேலும் திடுக்கிடும் தகவல் அம்பலமானது. அதாவது போலி நகை அடமான, விற்பனை மோசடி சம்பவம் அம்பலமான நிலையில் தன்னை தனிப்படை சல்லடை போட்டு தேடுவது தெரியவரவே, தலைமறைவான புவனேஸ்வரி ஆந்திராவைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரின் உதவியுடன் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது. இதையடுத்து புவனேஸ்வரியை அங்கிருந்து உடனே காரைக்கால் (தெற்கு) காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு அழைத்து வந்த போலீசார் தொடர்ந்து அவரிடம் கவரிங் நகை மோசடி தொடர்பாக அதிரடியாக விசாரித்து வருகின்றனர்.

போலி நகைகளை விற்றது, அடமானம் வைத்ததன் மூலம் கிடைத்த பணம் எங்குள்ளது, யார், யாரிடம் அவை கொடுத்து வைக்கப்பட்டுள்ளன, எத்தனை நபர்கள் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்துள்ளனர், செம்பு கம்பியில் தங்க முலாம் பூசி போலி நகையை தயாரித்து கொடுத்தது யார்? என்பது போன்ற தகவல்களை அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரித்து வருகின்றனர். இதில் சில துப்புகள் கிடைத்த நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைக்காக மற்றொரு தனிப்படை கோவை செல்ல தயாராகி வருகிறது. இதனிடையே கைதான புவனேஸ்வரியை காரைக்கால் நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் ஆஜர்படுத்தும் போலீசார், அவரை புதுச்சேரி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Tags : Karaikal ,Visakhapatnam , Business woman wanted in Karaikal fake jewelery scam arrested in Visakhapatnam: Caught while trying to flee abroad
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...