கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட இடங்களில் ரவுடிகளை போலீசார் சூடுபிடித்தது குறித்து விசாரணை நடத்த மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு

சென்னை: கோவை, திருச்சி,  தூத்துக்குடியில் கொலை, கொள்ளை வழக்குகளில் கைதானவர்கள் தப்பிஓடியபோது அவர்களை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்த விவகாரத்தில் விசாரணை நடத்த மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆணையத்தின் ஐ.ஜி. விசாரணை நடத்தி 6 வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

கோவை நீதிமன்றம் அருகே கோகுல் என்பவர்  4 பேர் கொண்ட கும்பல் கொடூரமாக வெட்டிப் படுகொலை  செய்தது. இந்த வழக்கு தொடர்பாக கோத்தகிரி அருகே கட்டப்பட்டு பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் வந்த 7 பேரை பிடித்து காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் ஹரி, பரணி செளந்தர், கெளதம், அருண்குமார், ஜோஸ்வ தேவ்பிரியன், சூரியா, டேனியல் ஆகியோர் கோகுலை கொலை செய்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரையும் நீலகிரி காவல் துறையினர், கோவை தனிப்படை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். காவல் துறையினர் 7 பேரையும் கோவைக்கு அழைத்து வரும் வழியில், கெளதம், ஜோஸ்வா ஆகியோர் மீது காவல் துறையினர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.காவல் துறையினரை தாக்கி விட்டு தப்பிச் செல்ல முயன்றதால், துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

திருச்சி எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் துரை மற்றும் அவரது சகோதரர் சோமசுந்தரம் மீது கொலை, நகை திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர் விசாரணியில், குழுமாயி அம்மன் கோயில் அருகே நகை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து நகை இருக்கும் இடத்தை கண்டறிய இருவரும் காவல் வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது, துரை, சோமசுந்தரம் ஆகியோர் காவல் ஆய்வாளர் மோகனை தள்ளிவிட்டு, முட்புதரில் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தி மற்றும் அரிவாளை கொண்டு ஆய்வாளர் மோகன், தலைமை காவலர்கள் சிற்றரசு, அசோக் ஆகியோரை சரமாரியாக வெட்டியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து காவல்துறையினர் தங்களை தற்காத்து கொள்ள இருவர் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தி இருவரையும் மடக்கி பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் வழக்கறிஞர் முத்துக்குமார் கொலையில் முக்கிய குற்றவாளியான ஜெயப்பிரகாஷை தட்டப்பாறை அருகே காட்டுப்பகுதியில் காவல்துறை கைது செய்ய முயலும் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப ஓட முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தி பிடித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பான செய்தி நாளிதழில் வெளியானதன் அடிப்படையில் மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது.

Related Stories: