×

அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர்: மல்லிகார்ஜூன கார்கே பரபரப்பு குற்றச்சாட்டு

டெல்லி: அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடைபெற்று வரும் நிலையில், அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் எனக்கூறி கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். அதேநேரம் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தனது லண்டன் பயணத்தின் போது இந்திய ஜனநாயகம் மற்றும் நாடாளுமன்றம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளிப்படுத்தியதாகவும், அதனால் அவர் மன்னிப்பு கோர வேண்டும் எனக்கூறி ஆளுங்கட்சி எம்பிக்களும் அமளியில் ஈடுபட்டனர்.

ஆளுங்கட்சி - எதிர்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த 2 நாட்களுக்காக இரு அவைகளும் முடங்கியது. இதனிடையே இன்றும் ஆளுங்கட்சி - எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் மூன்றாவது நாளாக இன்றும் நாடாளுமன்றம் முடங்கியது. இதனிடையே அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதாக கூறி, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 18 எதிர்கட்சிகளின் எம்பிக்கள் பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் பேரணியை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே உள்ள சாலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. எம்பிக்கள் பேரணியாக செல்லாமல் இருப்பதற்காக ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.

இருந்தும் போலீசாரின் தடையை மீறி அமலாக்கத்துறை அலுவலகம் நோக்கி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த ஏராளமான உறுப்பினர்கள் பேரணியாக செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கும் எம்பிக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பின் எம்பிக்கள் அனைவரும் தடுப்பு பகுதிக்கு அருகே ஒன்றிய அரசுக்கு எதிராக கையில் பதாகைகளுடன் கோஷங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே; ஒருபுறம், ஜனநாயகத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறோம் என பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர். ஆனால் மறுபுறம், வெளிப்படையாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் மேற்கொள்ள இருந்த அமைதி பேரணியை அவர்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

அமலாக்க துறை அலுவலகத்தில் மனு ஒன்றை அளிக்க விடாமல் எங்களை தடுத்து நிறுத்தியது தவறானது. இதனை நாங்கள் கண்டிக்கிறோம். அமைதியாக சென்று, மனு கொடுத்து விட்டு திரும்பி வரவே நாங்கள் விரும்பினோம். எங்களை அனுமதித்து இருக்க வேண்டும். அமலாக்க துறை எங்கள் பேச்சை கேட்க கூட மறுத்து விட்டனர். அரசும் எங்களை தடுத்து நிறுத்தி உள்ளது. ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என கூறுகிறவர்கள் தேச விரோதிகள் என அழைக்கப்படுகின்றனர். ஆனால், ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது என்பதற்கான ஓர் எடுத்துக்காட்டை நாம் அனைவரும் இன்று காண்கிறோம் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; உண்மையிலேயே இந்தியாவில் ஜனநாயகம் குறைந்து வருகிறது.

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் பலவீனமடைந்து வருகிறது. டிவி சேனல்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகின்றன, உண்மையைப் பேசுபவர்கள் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இது ஜனநாயகத்தை முடிவுக்குக் கொண்டுவரும் செயல்முறை இல்லையென்றால், வேறு என்ன? எனவே, ராகுல் காந்தி மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.

Tags : Adani ,Malligarjune Karke , Enforcement department refused to even listen to us on Adani issue: Mallikarjuna Karke sensational allegation
× RELATED அதானி நிறுவன மோசடி குறித்த செபி...