காதலன் இறந்த சோகத்தில் காதலி தற்கொலை

பெரம்பூர்: நாடு முழுவதும் தற்போது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்-அப் உள்பட பல்வேறு சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால், தங்களின் கையில் உள்ள செல்போன்களில் வரும் சமூக வலைதளப் பக்கங்களை மேய்ந்து வரும் பள்ளி மாணவ-மாணவிகள், குறிப்பிட்ட வயது வருவதற்கு முன்பே காதல்வயப்பட்டு பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் சிறுவர்கள் பலரை போலீசார் போக்சோ பிரிவின்கீழ் கைது செய்வதும் தொடர்ந்து வருகிறது. இதனால் அவர்களின் வாழ்க்கையும் பாதிக்கிறது.இதில் பள்ளி மாணவிகள் முன்பின் அறியாத நபர்களுடன் முகநூல் மூலமாக நட்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களின் ஆசைவார்த்தைகளை நம்பி வீட்டை விட்டு வெளியேறி பல்வேறு சிக்கல்களில் தவித்து வருகின்றனர்.

மேலும், உரிய முதிர்வு இல்லாத காதலால், வியாசர்பாடி மற்றும் கொடுங்கையூரில் தனது மகன் மற்றும் மகள் தற்கொலையால் 2 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வேதனையில் தவித்து வருகின்றனர் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை வியாசர்பாடி, மல்லிப்பூ காலனி, எச் பிளாக் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர். இவரது 18 வயது மகள் கல்லூரியில் முதலாம் ஆண்டு பி.காம் படித்து வந்துள்ளார். நேற்று கல்லூரிக்கு செல்லாமல் வீட்டில் தனியே இருந்துள்ளார். இதற்கிடையே தந்தை பலமுறை போன் செய்தும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமான தந்தை நேற்று மாலை வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உள்பக்கமாக பூட்டியிருந்தது. இதனால் அக்கம்பக்கத்தினரின் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.

அங்கு மகள் துப்பட்டாவால் தூக்கிட்டு இறந்த நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியானார். இதுகுறித்து தகவலறிந்ததும் வியாசர்பாடி போலீசார் விரைந்து வந்தனர். சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்ட விசாரணையில், சென்னை கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபருடன் முகநூல் மூலமாக நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்த சில மாதங்களாக முகநூல் மூலமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே கடந்த 10ம் தேதி காதலியை பார்க்க வேண்டும் என காதலன் அழைப்பு விடுத்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்து, கடந்த திங்கட்கிழமை பார்க்கலாம் என கூறியதாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த காதலன் ‘எனது சாவுக்கு யாரும் காரணமல்ல’ என கடிதம் எழுதி வைத்துவிட்டு அன்றைய தினமே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்ததும் அதே தினத்தில் காதலியை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதை பெற்றோர் தடுத்துவிட்டனர். எனினும், காதலன் இறந்த சோகத்தில் இருந்த கல்லூரி மாணவி நேற்று மாலை 2வது முறை துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து இருதரப்பினரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். அறியாத வயதில், முதிர்வு இல்லாத காதலால் இருதரப்பு பெற்றோரும் தங்களது குழந்தைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

Related Stories: