அண்ணாநகர்: அமைந்தரையில் நடைப்பாதையை ஆக்கிரமித்து காய்கறி, பழம், பூ மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடந்து செல்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. நடைபாதை கடைகளை அப்புறப்படுத்தி பாதசாரிகள் நடப்பதற்கு வழி செய்யவேண்டும் என அண்ணாநகர் 8வது மண்டல அதிகாரிக்கு பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில், முதல்கட்டமாக வில்லிவாக்கம் மற்றும் அரும்பாக்கம் ஆகிய பகுதிகளில் நடைபாதையில் போடப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகளை மாநகாரட்சி அதிகாரிகள் அகற்றினர். இந்நிலையில், அமைந்தகரை புல்லா அவென்யூ பகுதிகளில் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளால் 108 ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத நிலையிருப்பதாக புகார் எழுந்தது.
இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் நடைபாதையில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை அகற்றப்போவதாக நோட்டீஸ் வழங்கினர். அதன்படி இன்று அண்ணாநகர் 8வது மண்டலத்துக்கு உட்பட அமைந்தகரை புல்லாஅவென்யூ பகுதியில் நடைபாதையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த 200க்கும் மேற்பட்ட கடைகள் அண்ணாநகர் 8வது மண்டல அதிகாரி முருகேசன் மற்றும் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சாலையோர கடை வியாபாரிகள், மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரப்பரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் அண்ணாநகர் உதவி ஆணையர் ரவிச்சந்தின் மற்றும் அமைந்தகரை இன்ஸ்பெக்ட.ர் மாதேஸ்வரன் ஆகியோர் தலைமையில் 80க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அமைந்தகரை பகுதியில் பரபரப்பு நிலவியது.
