×

மெட்ரோ ரயில் திட்டத்திற்காக நிலத்தை காலி செய்ய வட்டாட்சியர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்தது ஐகோர்ட்..!!

சென்னை: மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூவிருந்தவல்லி நத்தம் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்ய பிறப்பித்த ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லியில் ஆதி திராவிடர் நத்தம் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்ய வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பூவிருந்தவல்லி வட்டத்திற்கு உட்பட்ட ஒரு பகுதியில் 456 சதுர மீட்டர் நிலத்தில் ஆதி திராவிடர் இனத்தை சேர்ந்தவர்கள் ஆக்கிரமித்து வசித்து வருவதாகவும், அந்த நிலம் மெட்ரோ பணிகளுக்கு தேவைப்படுவதால் இடத்தை காலி செய்யும்படி நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து வட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து சக்கரடீஸ் உள்ளிட்ட 5 பேர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஆதி திராவிடர் நத்தம் நிலம் என்பது அரசுக்கு சொந்தமான நிலம் அல்ல என மனுதாரர் தரப்பு வாதிட்டது. பட்டா பெறாமல் வசிக்கும் தங்களை நில ஆக்கிரமிப்பு சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்க முடியாது. பொதுப்பயன்பாட்டுக்கு நிலம் தேவைப்படும் என்பதால் உரிய இழப்பீடு தரும் பட்சத்தில் நிலத்தை வழங்க தயாராக உள்ளோம் என தெரிவிக்கப்பட்டது.

நத்தம் நிலத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களுக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு மற்றும் மெட்ரோ ரயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாதங்களை கேட்ட நீதிபதி, மெட்ரோ ரயில் திட்டத்துக்காக பூவிருந்தவல்லி நத்தம் நிலத்தில் வசித்தவர்களை காலி செய்ய வட்டாட்சியர் பிறப்பித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட்டார். உரிய இழப்பீடு வழங்கி நிலத்தை கையகப்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான 5 பேரின் வழக்கை முடித்து வைத்தது.

Tags : ICourt ,District Collector , Metro Rail Project, Land, District Commissioner, ICourt
× RELATED வேட்புமனு நிராகரிப்பு வழக்கு: ஐகோர்ட் மறுப்பு