பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், சென்னை வேப்பேரியில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, ஜனநாயக வலிமை தமிழ்நாட்டின் தலைமை என்ற எழுத்தியல் அரங்கம் நடைபெற்றது. இந்த அரங்கத்தை நடிகர் நாசர் பங்கேற்று துவக்கி வைத்தார். இதில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, நக்கீரன் கோபால், இந்து என்.ராம், தராசு ஷியாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்த அரங்கில் நடிகர் நாசர் பேசுகையில், அமைச்சர் சேகர்பாபு இருக்கும் இடங்களில் சிரிப்பும் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும்தான் உள்ளது. நான் அரசியல் சார்ந்தவன் அல்ல. அரசியலை உற்று நோக்குபவன். கலைஞர் எழுதிய 4 படங்களில் நான் நடித்துள்ளேன். கலைஞர் மகன் என்பது மு.க.ஸ்டாலினுக்கு பாக்கியம் இல்லை. அவருக்கு கிடைத்த முதல்வரின் பொறுப்பை சுமந்து, பிரமாதமாக ஆட்சி செய்து, தனது தந்தைக்கு பெருமை சேர்த்து வருகிறார் என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நக்கீரன் கோபால் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆண்களை மதிக்காத, சட்டத்தை மதிக்காத முதல்வரை நாம் பார்த்தோம். அதற்கு பின் ஒரு முதல்வர் வந்தார், கீழே குனிந்து கும்பிடு போடுபவர்கள். தற்போது உள்ள முதல்வர், அனைவருக்கான முதல்வராக உள்ளார். தமிழ்நாடு முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின்புதான், முதலமைச்சர் என்றால் இப்படி தான் இருக்க வேண்டுமா என அனைவரும் பார்க்கின்றனர். ஜெயலலிதாவை போல் தலைவராக முடிவெடுப்பேன் என்று கூறுகிறார் அண்ணாமலை. அவரை போல் இருக்க வேண்டுமானால், இவரும் பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்ல வேண்டும்.
இது அண்ணாமலைக்கு தெரியுமா? தன் மக்களை காத்து, அரவணைத்து வாழ்கிறவனே அரசன் என திருவள்ளுவர் எடுத்துக்காட்டாக கூறுவது போல, சமீபத்தில் வெளியான வடஇந்தியர்கள் மீதான தாக்குதல் சர்ச்சையை முதல்வர் கையாண்ட விதம் சிறப்பாக இருந்தது. தீயாக பரவிய சர்ச்சையை நீரூற்றி அணைத்தது முதல்வரால்தான் என்று கூறினார். பின்னர் மூத்த பத்திரிகையாளர் இந்து என்.ராம் பேசுகையில், நம்முடைய முதல்வரை கலைஞர் வழியாக பார்ப்பது தவறு. உழைப்பு என்றால் ஸ்டாலின் என ஒருமுறை கலைஞர் அழகான வார்த்தைகளில் சொன்னார். ஆனால், அதை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு, இன்று நமக்கு கிடைத்துள்ளது. இந்த கடுமையான வேலைகளுக்கு மத்தியில், அவருக்கு இருக்கும் நோக்கத்தை பார்த்தால், எல்லா மக்களுக்கும் நல்லது செய்ய வேண்டும் என்பதை கடமையாக வைத்துள்ளார்.
இதற்கு நடுவே, அவருக்கு இந்திய அளவில் பங்களிப்பு செய்ய வேண்டிய பணிகளும் வருகிறது. தனது செயல்பாட்டுக்கு மோசமான போக்கை உண்டாக்கும் ஒன்றிய அரசை கண்டித்தும் அவர் செயல்பட வேண்டி இருக்கிறது. ஜனநாயகத்தை மதிக்காமல், நீதிமன்றத்தை மதிக்காமல் ஒன்றிய அரசு செயல்படுகிறது. எதிர்க்கட்சிகள் ஆட்சி நடக்கும் மாநிலங்களில், ஆளுநரை வைத்து இடையூறு செய்வதையே வேலையாக வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் நல்லாட்சி நடப்பதை தடைசெய்யும் வகையில், இங்குள்ள ஆளுநர் செயல்பட்டு வருகிறார். ஆளுநர் செய்வது விஷமத்தனமான செயல். தேவையே இல்லாத பதவிதான் ஆளுநர் பதவி என்றார். இதில் இ.பரந்தாமன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.ரவிச்சந்திரன், பகுதி செயலாளர்கள் சுதாகர், வேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
