சென்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொது செயலாளர் பன்னீர் செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பென்சன் தொகை ஆயிரம் என்பதை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமான தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் வழங்கப்படும் ரூ.50 ஆயிரத்தை ரூ.2 லட்சமாக உயர்த்த வேண்டும். கட்டுமான பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து கொண்டே செல்கிறது.
இதனால் கட்டுமான தொழில் பாதிக்கப்பட்டு தொழிலாளர்கள் வேலையிழந்து வருகிறார்கள். இந்த விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள், உற்பத்தியாளர், கட்டுமான தொழிற்சங்க தலைவர்கள் கொண்ட முத்தரப்பு குழு ஒன்றை நிரந்தரமாக அமைக்க வேண்டும். அமைப்பு சாரா கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலில் வடமாநிலங்கள், ஆந்திரா, தெலங்கானா போன்ற மாநிலங்களிலிருந்து குறைந்தபட்சம் 50 லட்சம் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணி செய்து வருகிறார்கள். அவர்கள் வாரியத்தில் பதிவு செய்ய தனியாக அலுவலகம் அமைக்கப்பட்டு 5 வருடங்கள் ஆகியும் செயல்படாமல் உள்ளது. உடனடியாக செயல்படுத்த வேண்டும். ஒரு வருடம் பதிவு என்பதை 3 வருடங்களாக உயர்த்த வேண்டும்.
