சென்னை: திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு சென்ற இடத்தில் வீடு மாறி சென்தால் ஏற்பட்ட தகராறில் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலரை தாக்கிய 2 பேர் மீது கே.ேக.நகர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை வடபழனியில் தொழிலதிபர் சந்தோஷ்குமார் என்பவரின் வீட்டில் நடந்த திருட்டு தொடர்பாக விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சந்தோஷ்குமார் நிறுவனத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர் சுரேஷ் என்பவரின் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கே.கே.நகர் ஆற்காடு சாலையில் உள்ள முன்னாள் ஊழியர் சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு கடந்த 13ம் தேதி இரவு குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் காவலர் இலக்கியா, காவலர்கள், ஜெகன், இளையராஜா ஆகியோர் சென்றுள்ளனர். அப்போது காரிலேயே காவலர்கள் ஜெகன் மற்றும் இளையராஜா இருந்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் காவலர் இலக்கியா மட்டும் சுரேஷ் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட குழப்பத்தில் சுரேஷ் என்பவரின் வீட்டிற்கு செல்வதற்கு பதில், அருகில் உள்ள பொன்னுவேல் என்பவரின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது விசாரணைக்கு வந்தவர் பெண் இன்ஸ்பெக்டர் என்று தெரியாமல் பொன்னுவேல் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் பொன்னுவேல் பெண் இன்ஸ்பெக்டர் சுமதியை தாக்கியதாக கூறப்படுகிறது. அதை தடுக்க வந்த பெண் காவலர் இலக்கியாவை பொன்னுவேலுடன் இருந்த சுகுமார் என்பவர் தாக்கியுள்ளார். பிரச்னை பெரிய அளவில் சென்றதால் இன்ஸ்பெக்டர் சுமதி காரில் இருந்த காவலர்களை போன் செய்து உதவி கேட்டு அழைத்துள்ளார். அதன்படி விரைந்து வந்த காவலர்கள் இரண்டு பேரிடம் இருந்து பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலரை பத்திரமாக மீட்டனர். சம்பவம் குறித்து இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் பெண் காவலர் இலக்கியா ஆகியோர் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் படி தாக்குதல் நடத்திய பொன்னுவேல் மற்றும் சுகுமார் ஆகியோரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து கடுமையாக எச்சரித்து கடிதம் எழுதி வாங்கி அனுப்பி இருந்தனர். ஆனால் புகார் அளித்த பெண் இன்ஸ்பெக்டர் விசாரணைக்கு சென்ற இடத்தில் கடுமையாக தாக்கி ஆபாச வார்த்தைகளில் பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் முறையிட்டார். அதை தொடர்ந்து உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி கே.ேக.நகர் போலீசார் பெண் இன்ஸ்பெக்டர் மற்றும் பெண் காவலர் மீது தாக்குதல் நடத்திய பென்னுவேல் மற்றும் சுகுமார் மீது பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.