திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை: திருக்குவளையில் கலைஞர், முரசொலி மாறன் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை

கீழ்வேளூர்: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று அதிகாரிகளுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.அரியலூர், தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இரவு அவர் திருவாரூர் விளமலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் தங்கினார். இந்நிலையில் நாகை மாவட்டம் திருக்குவளையில் உள்ள திமுக தலைவர் மறைந்த கலைஞர் பிறந்த இல்லத்துக்கு இன்று காலை  உதயநிதி ஸ்டாலின் சென்றார்.

அங்கு கலைஞரின் தந்தை முத்துவேல், தாயார் அஞ்சுகம், கலைஞர் மற்றும் மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  இதைதொடர்ந்து கலைஞர் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் தனது வருகையை பதிவு செய்தார். முன்னதாக திருக்குவளை வந்த உதயநிதிக்கு கொளப்பாடு கடைத்தெருவில் நாகை மாவட்ட திமுக சார்பில் மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன், முன்னாள் அமைச்சர் மதிவாணன், திமுக மாநில விவசாய அணி துணைத்தலைவர் வேதரத்தினம், திமுக தீர்மானக்குழு உறுப்பினர் காமராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் மேகநாதன், கோவிந்தராசன், ராஜேந்திரன் உட்பட திரளானோர் பங்கேற்றனர்.

இதைதொடர்ந்து திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு கூட்டம் காலை 10 மணிக்கு நடந்தது. இதில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அதிகாரிகளுடன், உதயநிதி கலந்துரையாடினார். இதைதொடர்ந்து விளமலில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தார். மாலை 3.30 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு செல்கிறார்.  அங்கு மொழிகள் ஆய்வகத்தை திறந்து வைத்து பேசுகிறார்.

Related Stories: